Travel: இந்தியாவில் குளிர்கால விடுமுறையை அனுபவிக்க மிகவும் இயற்கை அழகுமிக்க இடங்கள் எவை?
பனிப்பொழிவு மிக்க இடங்கள், பனிச்சறுக்கு மலை பிரதேசங்கள்,கண்கவர் கடற்கரைகள், அழகிய வனப்புமிக்க பழக்காலத்து இடங்கள் என குளிர்காலத்தில் சில ரம்யமான இடங்களைப் பார்வையிடலாம்.
இந்தியாவில் குளிர்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலரும் தமது விடுமுறையை கழிக்க திட்டங்களை வகுத்து இருப்பார்கள். அந்த வகையில் குளிர்கால விடுமுறையை நாம் எந்தெந்த பகுதிகளுக்கு சென்றால் இனிமையாக அனுபவிக்கலாம் என பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தளவில் ஏராளமான பசுமை வளங்கள் மிக்க மலைப்பிரதேசங்கள் நிறைந்துள்ளன . அதேபோல் இயற்கையான கடற்கரை பகுதிகள், உப்பங்கழிகள் ,அழகிய வனப்பகுதிகள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அந்த வகையில் இந்தியாவின் பனிச்சறுக்கு தலைநகரமாக கருதப்படும் உத்தரகாண்டில் உள்ள அவுலி, ஊசியிலைக் காடுகள், பனி சூழ்ந்த மலைப் பகுதிகள் மற்றும் கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ளது.
ஆகவே இந்த குளிர்கால விடுமுறையை சற்று வித்தியாசமாக அனுபவிக்கும் வகையில் .இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த தனித்துவமிக்க இடங்களை பார்வையிட திட்டமிடலாம்.
பனிப்பொழிவு மிக்க இடங்கள், பனிச்சறுக்கு மலை பிரதேசங்கள்,கண்கவர் கடற்கரைகள், அழகிய வனப்புமிக்க பழக்காலத்து இடங்கள் என குளிர்காலத்தில் சில ரம்யமான இடங்களைப் பார்வையிடலாம்.
குல்மார்க், காஷ்மீர்
குல்மார்க்கின் பழைய பெயர் கெளரிமார்க் எனக் கூறப்படுகிறது. இதற்குக் கடவுள் சிவனின் மனைவி என்று பொருள்படும். குல்மார்க் வரலாற்றுக் காலத்தில் அரசர்களின் கோடைவாசஸ்தலமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. குல்மார்க் என்றால் பூக்களின் இடம் என்று பொருள்படுகிறது. இந்திய-பாகிஸ்தானிய எல்லைக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள குல்மார்க்கில் பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும்.
2730 மீட்டர் உயரத்தில் , ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் அமைந்துள்ளது. இங்கு
அபர்வத் சிகரத்தின் பனிக்கட்டிகளில் இருந்து உருகி வழியும் நீரில் உருவான நிங்கல் நல்லா என்னும் நீரோடையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கின், அவுட்டர் சர்க்கிள் வாக் எனப்படும் வெளிவட்ட நடைப்பயணம் பாதை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும்.
இதமான காலநிலை, எழில் ததும்பும் இயற்கை காட்சிகள், பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டங்கள், அடர்ந்த பைன் மரக்காடுகள், அழகிய ஏரிகள் என அத்தனை வனப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கும் குல்மார்க் உலகெங்கும் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை தன்னகத்தே கவர்ந்திருக்கிறது.
சொர்க்கத்திற்குச் சற்றும் குறையாத மலைவாசஸ்தலம், குளிர்ந்த காற்று மற்றும் அழகான சுற்றுப்புறங்கள் அனைத்தும் குல்மார்க்கின் அழகை மேம்படுத்துகின்றன.இங்குள்ள அபர்வத் என்ற இந்த சிகரம் பனிச்சறுக்கு மிகவும் பிரபலமானது.
வயநாடு, கேரளா
கடவுளின் நகரம் என அழைக்கப்படும் கேரளத்தின் வட கிழக்கு பகுதியில் மலைகள் சூழ்ந்த பசுமையான மாவட்டமாக வயநாடு அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளும், பச்சை பசேலென்று படர்ந்திருக்கும் அழகிய இயற்கையும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மீன் முட்டி நீர்வீழ்ச்சி,
சூச்சிப்பாறா நீர்வீழ்ச்சி,
செம்பரா சிகரம்,
பானசுரா அணைக் கட்டு,
காட் காட்சி முனை,
போன்ற
அதன் ஏராளமான இயற்கை வளங்களை காணலாம்.
வயநாடு மலை ஏற்றத்திற்கு மிகவும் பிரபலமான ஒரு பகுதியாகும். குளிர்காலத்தில் இந்த இடங்களை பார்வையிடச் செல்வது சிறந்த தருணமாகும். இங்கு புத்துணர்ச்சியூட்டும் ஆயுர்வேத வைத்தியம் மிகவும் பிரபலமானது. .
லட்சத்தீவு:
லட்சத்தீவில் கடலின் தெளிவை நேரடியாகவே நாம் காணலாம். இங்குள்ள தெளிவான நீரில் நீந்தி விளையாடவும் முடியும். இங்கு கடல் நீர் தெளிவாக இருப்பதால் பவளப்பாறைகளை நாம் நேரடியாகவே கண்டு ரசிக்கலாம். லட்சத்தீவின் கடற்கரை பகுதிகளில் உள்ள வெள்ளை மணல் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். இங்கு பல்வேறு நீர் விளையாட்டுகள் உள்ளன .இந்த பகுதியானது ஒரு சீசனுக்கு மட்டுமல்ல ஆண்டு முழுவதும் சுற்றுலா மையமாகவே இயங்குகிறது. லட்சத்தீவு பகுதியானது குளிர்கால விடுமுறையை அனுபவிக்க சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
அவுலி, உத்தரகாண்ட்:
இந்தியாவின் பனிச்சறுக்கு விளையாட்டின் தலைநகராக உத்தரகாண்டின் அவுலி மலைப்பிரதேசம்
கருதப்படுகிறது. இங்குள்ள ஊசியிலைக் காடுகள், பனி பிரதேசங்கள் மற்றும் ஓக் மரங்கள் கண்ணுக்கு ரம்யமாக உள்ளன. சில்லென வீசும் காற்றும் உடலுக்கு நல்ல புத்துணர்வை அளிக்கும். குளிர்காலத்தில் அவுலிக்குச் செல்லும்போது, பனிச்சறுக்கு தவிர, நாற்காலி கார் சவாரி மற்றும் மலையேற்றம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம்
கூர்க், கர்நாடகா:
மலைகளைத் தொடும் வானம் மற்றும் மேகங்கள் வருடியவாறு நகருவதால், இந்த அழகான நகரம் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்றுமொரு அற்புதமான மலை நகரம் தான் கூர்க். சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த ஒரு அழகான இடமாகும். அதன் அழகிய இயற்கைக்காட்சி மற்றும் பசுமையான காபி பண்ணைகள் அனைவரையும் தன்வசம் இருக்கிறது. பிரம்மிப்பான இயற்கை அழகால் மிளிரும் கூர்க் பகுதி குளிர்காலத்தில் சுற்றுலா செல்ல மிகவும் சிறந்த இடமாகும். கூர்க் பகுதியில் மலையேற்றம் போன்ற சாகச நிகழ்வுகள் மிகவும் பிரசித்தி பெற்றது .