Monogamous Animals: அடேங்கப்பா.. ஒரே பார்ட்னருடன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் வாழும் விலங்குகள் எது? எது? தெரியுமா..?
ஒரே இணையுடன் தங்களது வாழ்க்கை முழுவதும் இருக்கும் விலங்குகள் எது என உங்களுக்குத் தெரியுமா
மோனோகாமி என்பது ஒரு நபர் ஒரே நபரை தனது வாழ்க்கை முழுவதும் இணையாகக் கொள்வது. வாழ்க்கை முழுவதும் ஒரே நபருடன் இருக்கும் எண்ணம் சிலருக்கு உகந்ததாக இருக்கும் சிலருக்கு ஏற்றதாக இருக்காது. அது அவரவர் விருப்பம். மனிதர்கள் மட்டுமில்லாமல் மிருகங்களிலும் கூட மோனோகாமி கடைபிடிக்கப்படுகிறது. அப்படி எந்த எந்த விலங்குகள் ஒரே இணையுடன் தங்கள் வாழ்க்கை முழுவதும் பயணிக்கின்றன என்று பார்க்கலாம்.
பெங்குயின்:
பெங்குயின்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் வாழ்கின்றன என்று இதற்கு முன்னால் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒவ்வொரு இணை சேரும் காலத்திலும் ஒரு பொதுவான இடத்தில் பெங்குயின்கள் கூடுகின்றன. தங்களுக்கான இணையைத் தேர்வு செய்ய பெண் பெங்குயின்கள் போட்டிபோடுமாம். ஆம் பெண் பெங்குயின்கள் தான். தங்களது இணையைத் தேர்வு செய்து அந்த குறிப்பிட்ட காலம் முழுவதும் சேர்ந்து இருக்கின்றன. பின் இரண்டும் அவரவர் வந்த இடத்திற்கு பிரிந்து சென்றுவிடுகின்றன.
ஒரு ஆண்டுகளுக்கு இந்த இரண்டு பெங்குயின்களும் பார்த்துக் கொள்வதில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அதே நேரத்தில் தனது இணைக்காக வந்து காத்திருக்கும் ஆண் பெங்குயின். சில நாட்கள் கழித்து பெண் இணை வந்து சேரும். நம்பமுடியவில்லையா? கூடுதலான ஒரு தகவல் என்னவென்றால் இந்த ஒரு வருடகாலம் பிரிந்து இருக்கும் பெங்குயின்கள் தங்களது இணைக்கு 99% நேர்மையாக இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. மகரூனி என்கிற பெங்குயின் வகை தங்களது இணைகளை நெடு நாட்களுக்கு பிறகு பார்க்கும்போது நடனமாடி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்குமாம். மற்றொரு புதுமையான விஷயம் என்னவென்றால் ஆண் குட்டிகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்று பெண் இரைதேட செல்லுமாம். பெங்குயின்களிடம் நிறையக் கற்றுக்கொள்ள இருக்கிறதோ..?
சாம்பல் நிற ஓநாய்
சாம்பல் நிற ஓநாய்கள் தங்களது வாழ்நாளை ஒரே இணையுடன் செலவிடுகின்றன. இந்த இணையின் கட்டுப்பாட்டில் தான் கூட்டத்தின் இருக்கும் மற்ற ஓநாய்கள் இருக்கும்.
கிப்பன்
மனிதர்களுக்கு மிக நெருக்கமான குரங்குகளில் ஒரு வகை கிப்பன் குரங்குகள். இவை சுமார் நாற்பது ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. இந்த நாற்பது ஆண்டுகள் இவை ஒரே இணையுடன் நேரத்தை செலவிடும். தங்களது குழந்தைகளை சேர்ந்து வளர்ப்பதில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சமமான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நேரம் செலவிட்டதுபோக தங்களுக்கான தனிபட்ட நேரம் என தனியாக ஒதுக்கி சேர்ந்து சுற்றித் திரிவது இந்த குரங்குகளின் பிடித்தமான பொழுதுபொக்காம்.
அன்னப்பறவை
அன்னப்பறவைகள் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பை செலுத்தக் கூடியவை.தங்களது காதலை வெளிப்படுத்த தலைகளை ஒன்றுசேர்த்து ஒருவரை ஒருவர் வருடிக்கொள்ளும். இது பார்ப்பதற்கு இருதய வடிவில் காட்சியளிக்கும். அன்னப் பறவைகள் காதலின் சின்னமாகக் கருதப்படுவது என்ன காரணத்தினால் என்று தெரிகிறதா மக்களே?