Aloe Vera Curry: கற்றாழை குழம்பு கேள்விப்பட்டிருக்கீங்களா.. இதுல இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு?
பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கற்றாழையை எப்படி சாம்பார், குழம்பு, சப்ஜி செய்வது அதில் உள்ள சத்துக்கள் என்ன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக பல வகையான கற்றாழைகள் முளைத்திருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கிறது. தீக்காயம், குடல்புண், சருமம் சார்ந்த பிரச்சனைகள், தலை முடி வளர என உள்ளிட்ட பலவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம். இதன் பயன்பாடு பட்டியல் நீளும். இன்றைய சந்தையில், அழகுசாதன பொருட்கள், உணவு சார்ந்த பொருட்கள், உடல் எடை குறைக்க என பல்வேறு துறைகளில் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
அன்றைக்கு வீட்டு வைத்தியத்தில் இடம்பெற்ற ஒரு மருத்துவக் குணமுள்ள குறுச்செடி, இன்றைக்கு பெரிய லாபம் ஈட்டும் வியாபார பொருளாகிவிட்டது. கற்றாழைச் செடி கிடைக்காதாவர்கள், அதிலிருந்து உணவு தயாரிக்க நேரம் இல்லாதவர்கள் கடைகளில் இருக்கும் க்ரீம்கள், கற்றாழை ஜூஸ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், நீங்கள் சிறிய தொட்டியில் வளர்க்கும் கற்றாழைக்குள் பல நன்மைகள் ஒளிந்திருக்கிறது. அதன் பயன்பாடும் அதிகம். கற்றாழையில் இருந்து உணவு தயாரிப்பதும் எளிமையானதுதான். கோடைக் காலம் தொடங்க இருக்கிறது. அப்படியிருக்க, நம் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க கற்றாழை சிறந்த சாய்ஸ்.
பொதுவாக கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதில் ஜூஸ் தயாரித்து பருகலாம். மசாலா மோர் உடன் கற்றாழையை சேர்த்து அரைத்தால் ‘கற்றாழை மோர்’ ரெடி!
போலவே, நீங்கள் கற்றாழையில் சாம்பார், காரக்குழம்பு, சப்ஜி செய்யலாம். தெரியுமா! கற்றாழையை மசாலா கலந்த ஒன்றாட சாப்பிட விரும்புவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.
கற்றாழை குழம்பு செய்வது எப்படி?
கற்றாழை குழம்பு செய்வது எளிது. நீங்கள் தினமும் செய்யும் பருப்பு சாம்பாரில் போடும் காய்கறிக்கு பதிலாக இதைப் பயன்படுத்துங்கள்.
அதாவது, சின்ன வெங்காயம், தக்காளி, சேர்த்து சாம்பார் ரெடியானதும், அதில் சுத்தம் செய்யப்பட்ட கற்றாழையை நறுக்கி சாம்பாருடன் சேர்க்கவும். பின்னர், 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். சுவையான கற்றாழை சாம்பார் தயார்.
இதேபோன்றுதான் கற்றாழை காரக்குழம்பும், பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து செய்யும் காரக்குழம்பு தயாரானதும் கடைசியாக, கற்றாழையை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும். 5-10 நிமிடங்கள் மட்டுமே கொதிக்கவிட வேண்டும்.
கற்றாழை சப்ஜி:
கற்றாழை சப்ஜி செய்ய, கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதை நன்றாக கொதிக்கும் தண்ணீர்ல் போட்டு, சிறிது மஞ்சள் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். இதோடு சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். பின்னர், இதை வடிக்கட்டி தனியாக வைக்கவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், வேக வைத்த கற்றாழையை அதோடு சேர்க்கவும். தேவையான அளவு மிளகாய் தூள், மல்லிப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மசாலா சேரும் வரை மிதமான தீயில் வைக்கவும். பின்னர், கற்றாழை மசாலாவுடன் சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கற்றாழை சப்ஜி ரெடி!
விரும்பம் உள்ளவர்கள், கற்றாழையை தோலுடன் வேக வைக்கலாம். இல்லையெனில், தோல் நீக்கியும் சமைக்கலாம்.
கவனிக்க:
கற்றாழையை தோல் நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், கற்றாழை துண்டுகளை தண்ணீர்ல் போட்டி 8-10 முறை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கற்றாழையின் மேல் லேயரில் உள்ள வழவழப்பான தன்மை நீங்கியிருக்கும். அப்போது கற்றாழை உண்ணுவதற்கு ஏற்றது எனத் தெரிந்து கொள்ளலாம்.
கற்றாழையின் பயன்கள்:
கற்றாழை வெப்பத்தைத் தணிக்கும்.
இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருக்கிறது.
கற்றாழை குடல் சுவர்களை புண்களிலிருந்து பாதுகாக்கிறது.
கற்றாழையை சாப்பிடுவது உடல் செல்களின் நலனைப் பாதுக்காக்கிறது.
கற்றாழையில் உள்ள ஆண்டி ஆசிட்னஸ் உடலுக்கு நன்மை தருபவை.
மூட்டுவலி, வாய் ஆரோக்கியத்திற்கு கற்றாழை சிறந்தது.
சத்துமிக்க கற்றாழையைச் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமுடன் இருக்கும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )