World Childrens Day | தவறாம படிங்க!: பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க 10 முக்கிய பாயிண்ட்ஸ்கள்!
உடல் குறித்து உங்கள் குழந்தைகளிடம் பெற்றோராக நீங்கள் சொல்லித்தர வேண்டிய முக்கியமான பத்து பாயிண்ட்ஸ்கள்...
ஒவ்வொரு வருடமும் 20 நவம்பர் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலகக் குழந்தைகள் தினமாக அனுசரிக்கிறது.இந்த நாளில் குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல் அதிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்வது மற்றும் இதன் வழியாக குழந்தைகளுக்கான உடல் ரீதியான புரிதலின் தேவை குறித்தும் பேச வேண்டியதாகிறது.
உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் சொல்லித்தர வேண்டிய முக்கியமான பத்து பாயிண்ட்ஸ்கள்...
1. உடலுறுப்புகள் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சிறிய வயதிலேயே பேசத் தொடங்குங்கள். அதுபற்றிப் பேசுவது தவறில்லை. நீங்கள்தான் உடலுறுப்புகள் பற்றி அவர்களிடம் பேசவேண்டும். பெற்றோராக அது உங்களுடைய பொறுப்பு.
2. உடலுறுப்புகள் பற்றிப் பேசத் தொடங்கும்போது. உடலில் சில உறுப்புகளைப் பிறர் தொடக் கூடாது எனக் கற்றுக் கொடுங்கள். தொட முயன்றால் பிள்ளைகளை ‘நோ’ சொல்வதற்குப் பழக்கப் படுத்துங்கள்.
3.உடலில் இந்தப் பகுதியை பிறர் தொடலாம், மற்ற பகுதிகளை பிறர் யாரும் தொடக் கூடாது என உடலை பிறர் தொடுதல் தொடும் வரையறைகளை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்
4. உடலைப் பற்றி எதையும் ரகசியமாக வைத்திருக்கக் கூடாது எனப் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். அவர்கள் உடலைப் பிறர் தொடுவது எந்த வகையிலும் ரகசியம் கிடையாது. யாராவது அத்துமீறித் தொட்டுவிட்டு அதனை அவர்களிடம் ரகசியமாக வைத்திருக்கும்படி சொன்னால் உங்களிடம் சொல்லச் சொல்லுங்கள்.
5. ஒருவர் அத்துமீறித் தொடவரும்போது பிள்ளைகளுக்குச் சங்கடமான அச்சுறுத்தும் அந்தச் சூழலில் இருந்து எப்படி வெளியேறுவது என அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்
6. அவர்கள் தற்காப்புக்காக கோட் வோர்ட் சிலவற்றைக் கற்றுக் கொடுங்கள். இது மிகவும் பயன் தரக் கூடியது. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமேயான கோட் வோர்ட் பயன்படுத்துவது ஆபத்தான சமயங்களில் உங்களை அலர்ட்டாக வைக்கும். பிள்ளைகளுக்குப் பிடித்தமான அவர்களால் எளிதில் கனெக்ட் செய்துக் கொள்ளக் கூடிய ஒன்றை கோர்ட் வோர்ட்டாகப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்
7. அவர்களது உடல் குறித்த ரகசியத்தை உங்களிடம் பகிர்வதற்குத் தயங்க வேண்டாம் எனக் கூறுங்கள். யாரேனும் உங்கள் பிள்ளைகளைத் தொட்டால் அதைப் பற்றி உங்களிடம் சொல்லுவதற்குப் பிள்ளைகள் அச்சப்படுவார்கள். அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை முன்கூட்டியே அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
8. பிள்ளைகளிடம் குட் டச்- பேட் டச் என்கிற சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டாம்.அது அவர்களைக் குழப்பும் .அதற்கு பதிலாக ’சீக்ரெட் டச்’ என்கிற சொல்லைப் பயன்படுத்துங்கள். பெரும்பாலும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் ரகசியமாகத் தான் குற்றத்தில் ஈடுபடுவார்கள்.அதனால் சீக்ரெட் என்கிற சொல்லாடல் பிள்ளைகளால் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்.
9. பிள்ளைகளிடம் அவர்களது அந்தரங்கப் பகுதிகளை யாரும் புகைப்படமோ வீடியோவோ எடுக்க அனுமதிக்கக் கூடாது எனச் சொல்லிக் கொடுங்கள்.
10. இந்த விதிகள் அத்தனையும் தெரிந்த நபர்களிடமும் ஏன் உங்கள் பிள்ளைக்கு நெருங்கிய பிரெண்ட்ஸ்களிடமும் கூடப் பொருந்தும் எனச் சொல்லிக் கொடுங்கள்.