Travel : குளுகுளு ஹார்ஸ்லி.! தலகோனா நீர்வீழ்ச்சி! ஆந்திராவில் இருக்கும் சூப்பரான சுற்றுலாத் தளங்கள்!
அழகான சாம்பல் மேகங்கள், பெரிய நிலப்பரப்புகள், நீல வானம் மற்றும் அற்புதமான காட்சிகள் என விடுமுறையை சிறப்பாக்க பொருத்தமான இடம்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு சுற்றுலாத் தளங்கள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது .நமது தமிழ்நாட்டில் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதேபோல் ஆந்திராவில் ஒரு சில மலைப்பிரதேசங்கள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளன. அதில் ஒன்றுதான் ஹார்ஸ்லி ஹில்ஸ் . இது ஆந்திராவின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. குறுகிய மலைப்பாதையின் இரு மருங்கிலும் அடர்த்தியாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த யூகலிப்டஸ், குல்மோஹர், அலமண்டா மற்றும் ஜகராண்டா மரங்களைக் காணலாம்.அழகான சாம்பல் மேகங்கள், பெரிய நிலப்பரப்புகள், நீல வானம் மற்றும் அற்புதமான காட்சிகள் என அழகான விடுமுறையை சிறப்பாக்க இந்த இடம் ஆகப் பொருத்தமாக இருக்கும். மேலும் இந்த இடமானது சாகசம் செய்பவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது.வனவிலங்கு சரணாலயம் முதல் ரம்யமான நீர்வீழ்ச்சிகள் வரை இந்த இடம் நம் இதயத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.ஹார்ஸ்லி மலைகளின் சிறப்பு மற்றும் அதன் சிறப்பம்சமிக்க இடங்கள் பார்ப்போம்.
1. கைகா நீர்வீழ்ச்சி
இது நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.இது சித்தூர் மாவட்டம் ஹார்ஸ்லி ஹில்ஸிலிருந்து 92 கி.மீ.தொலைவில் உள்ளது. கைகா நீர்வீழ்ச்சி இயற்கையுடன் நேரத்தை செலவிட சிறந்த இடமாக கருதப்படுகிறது. டுமுக்குரல்லு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் இது, ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அழகான மற்றும் கவர்ச்சிகரமான இடமாகும். இத்தகைய நீர்வீழ்ச்சியானது கைகா ஓடையில் இருந்து வெளியேறி, கவுண்டியா வனவிலங்கு சரணாலயம் வழியாக பாய்கிறது. 40 அடி பெரிய பாறையில் இருந்து பாயும் நீரானது,இந்த இடத்தில் பார்க்க வேண்டிய இயற்கை காட்சியாக உள்ளது. இன்னும் மழைக்காலத்தில், பாறையில் இருந்து பீறிட்டு பாயும் தண்ணீரின் அழகு நம் கண்களை கவரும்.
2.சென்னகேசவர் கோவில்
இந்த சென்ன கேசவர் கோவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்று. ஹார்ஸ்லி மலையில் அமைந்திருக்கின்ற சென்னகேசவா கோயில் முக்கியமான சுற்றுலா மற்றும் மக்கள் பக்தியோடு வணங்கி செல்லும் இடமாகும். இது பேருந்து நிலையத்திலிருந்து 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சோம்பல்லே கிராமத்தில் உள்ளது.தென்னிந்தியாவின் வளமான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக, இக்கோவிலில் அமைந்திருக்கின்ற மண்டபம் மற்றும் விஷ்ணு ஆலயம் ஆகியவை காண்போரை வியப்பில் வாழ்த்தி விடும்.
இந்தக் கோவில் சோழப் பேரரசின் ஆட்சியின் போது இந்த பகுதியில் இருந்த உள்ளூர் தலைவரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் விஜயநகர அரசர்களால் இதன் முழு வடிவத்தை பெற்றது.
3. ஹார்ஸ்லி ஹில்ஸ் மிருகக்காட்சிசாலை
இது ஹார்ஸ்லி ஹில் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ.தொலைவில் உள்ளது.
ஹார்ஸ்லி ஹில்ஸ் மிருகக்காட்சிசாலையானது வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகும். ஏராளமான தாவரங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த ஒரு சிறிய உயிரியல் பூங்கா இது. இங்கு பலதரப்பட்ட வனவிலங்குகள் காணப்படுவதால் குழந்தைகளை கவரக்கூடிய உயிரியல் பூங்காவாக இது இருக்கிறது.இது ஆந்திர மாநில வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
4. விஸ்பர் விண்ட் வியூ பாயிண்ட்
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை இந்த இடத்திலிருந்து காண கண்கோடி வேண்டும். அவ்வளவு ரம்யமாகவும், அழகானதாகவும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இந்த இடத்திலிருந்து காணும் இருக்கிறது. ஹார்ஸ்லி ஹில்ஸை முழுவதுமாகப் பார்க்க சிறந்த வழி எதுவெனில் விஸ்பர் விண்ட் வியூ பாயின்ட்டுக்கு மலையேறுவதும், மலைப்பகுதியிலிருந்து முழு மலைத் தொடரையும் பார்த்து ரசிப்பது ஆகும்.
இது பசுமையான காடுகள், பறவைகள் மற்றும் அற்புதமான பள்ளத்தாக்குகள் நிறைந்த ஒரு அற்புதமான தளமாகும்.
5. கலி பந்தலு
இது ஹார்ஸ்லி பேருந்து நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரத்தில் பார்ப்பது மிகவும் அழகாகவும் மனதுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். இங்கு செல்ல எந்த டிக்கெட்-ம் தேவையில்லை.இது ஆந்திராவில் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளது.இங்கு நாம் மேலிருந்து அழகான காட்சியை அனுபவிக்கும் போது இதமான காற்று முழுமையாக நம்மை ஆட்கொள்வதை உணரலாம். இது சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் புள்ளியாகவும் அறியப்படுகிறது.
6.கல்யாணி
கல்யாணி என்பது ஒரு பெரிய யூகலிப்டஸ் மரத்தின் பெயர் ஆகும்.வான் விஹாரில் அமைந்துள்ள இந்த 150 ஆண்டுகள் பழமையான மரம், ஹார்ஸ்லி ஹில்ஸ் சுற்றுலாத் தலங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது.இது ஹார்ஸ்லி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. பழைய வன பங்களாவின் பின்னால் அமைந்துள்ளது.இந்த மரம் சுமார் 40 மீட்டர் உயரம் மற்றும் 5 மீட்டர் பரப்பளவில் உள்ளது. இதன் காரணமாக, பெரிய மரம் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக உள்ளது.இது 1859 ஆம் ஆண்டு இப்பகுதியின் கலெக்டரால் நடப்பட்டது என்று கூறப்படுகிறது.
7. கங்கோத்ரி ஏரி
இது ஹார்ஸ்லி பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது.கங்கோத்ரி ஏரி, நகரத்தின் ஒரு நுழைவாயில் ஆக பார்க்கப்படுகிறது.இந்த கங்கோத்ரி ஏரியானது, முக்கியமாக மழைக்காலங்களில் நீர் நிரம்புவதால், சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. இந்த ஏரி அற்புதமான மரங்கள் மற்றும் பசுமையான தாவரங்களால் சூழப்பட்டுள்ளது.
8. மல்லம்மா கோவில்
இது ஹார்ஸ்லி ஹில்ஸ் சுற்றுலாத் தலங்களின் மற்றொரு முக்கியமான இடமாக இந்த மல்லம்மா கோயில் உள்ளது. புராணங்களின்படி, ஒரு காலத்தில் மல்லமா என்ற பெண், இங்கு வாழ்ந்து கிராம மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்தார், ஆனால் திடீரென்று ஒரு நாள் அவள் காணாமல் போனாள். அன்றிலிருந்து மக்கள் அவளை ஒரு தெய்வமாகக் கருதி அவளது பெயரால் இந்த கோவில் கட்டப்பட்டு மல்லம்மாள் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறாள். இந்த கோயிலுக்கு வர வேண்டுமென்றால் மலைகள் ஏறி மட்டுமே வர முடியும்.ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு மலை ஏறி வந்து மல்லம்மாவை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.இது ஹார்ஸ்லி ஹில் பேருந்து நிலையத்திலிருந்து 350 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு பகலில் செல்வது நல்லது.
9. கவுண்டினியா வனவிலங்கு சரணாலயம்
இது ஆந்திரப் மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு யானைக் காப்பகம் ஆகும். இது புகழ்பெற்ற கவுண்டினியா வனவிலங்கு சரணாலயம் ஆகும். இதில் 78 யானைகள், பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன.
கவுண்டினியா சரணாலயத்தின் இயற்கைச் சூழலானது,கரடுமுரடான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் தெற்கு வெப்பமண்டல முள் வகை காடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த சரணாலயம். கைகா மற்றும் கவுண்டினியா ஆறுகள் சரணாலயத்தின் வழியாக பாய்கின்றன.
10. தலகோனா நீர்வீழ்ச்சிகள்
இது சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தலகோனா நீர்வீழ்ச்சி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். ஆந்திரப் பிரதேசத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் தலகோனா நீர்வீழ்ச்சியும் ஒன்று. நீர்வீழ்ச்சியானது 270 அடி உயரம் கொண்ட பள்ளத்தாக்கில் ஆழமாக விழுகிறது.இது ஆந்திர மாநில மட்டுமல்லாது நாடு முழுவதிலுமிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.இது ஸ்ரீ வெங்கடேஸ்வராவ தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் இயற்கையின் பசுமையை நீங்கள் அனுபவிக்க முடியும், அருகிலுள்ள வனப்பகுதிகளையும் நீங்கள் காணலாம்.