Diabetes: 2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேருக்கு நீரிழிவு பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Diabetes: உலகில் 2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் 2050-ம் ஆண்டிற்குள் 130 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், நீரிழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரிழிவு பாதிப்பு குறித்த ஆய்வு கட்டுரை ஒன்று (Lancet) லான்செட் இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், 1.3 பில்லியன் மக்கள் அதாவது மொத்த மக்கள்தொகையில் 13.4 சதவீதம் மக்கள் 2050-ம் ஆண்டிற்குள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2050-ம் ஆண்டு நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021- ம் ஆண்டு 6.7% ஆக இருந்த எண்ணிக்கை இன்னும் 27 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 6.7 % -ஆக இருந்த விகிதம் 13.4% ஆக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நீரிழிவு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள நாடுகளில் வரும் 30 ஆண்டுகளில் நீரிழிவு பாதிப்பு குறைய வாய்ப்பில்லை என்று எச்சரித்துள்ளது.
மற்றோரு ஆய்வு இதழில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தொற்றாத நோய்களின் பாதிப்பு அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13.6 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர கண்காணிப்பு தேவைப்படும் நிலையும் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நீரிழிவு பாதிப்பு அதிகரித்தது. நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்களைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகரித்து உயிரிழிக்கும் ஆபத்திருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Albert Einstein College of Medicine and Montefiore Health System என்ற நிறுவனத்தை சேர்ந்தவரும், ஆய்வு கட்டுரையின் எழுத்தாளருமான ஷிவானி அகர்வால் தெரிவிக்கையில், “நீரிழிவு உலகையே அச்சுறுத்தும் நோயாக உள்ளது. எவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. சுகாதார கட்டமைப்பு, திட்டங்களுக்கு மிகவும் சவால் மிகுந்ததாகவும் நீரிழிவு பாதிப்பின் எண்ணிக்கை உயர்வு விளங்குகிறது.” என்று தெரிவித்தார்.
உலக நாடுகள் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியம்
கேரட் - இதில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு காய் ஆகும். இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளலாம். குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் குறைந்த கார்போஹைட்ரெட் கொண்ட உணவாகும். நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. இதை நீரிழிவு நோயாளிகள் அவர்களது உணவில் எடுத்து கொள்ளலாம். இயற்கையிலே இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் பச்சையாகவோ, வேகவைத்தோ சாப்பிடலாம்.
ப்ரோக்கோலி - இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு அட்டவணையில் இதை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குழாயில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.இதில் இருக்கும் சல்போராபேன் எனும் கலவை சல்போராபேன் என்சைம்களை உருவாக்குகிறது. இது இரத்த நாளங்களை பாதுகாக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இதை சூப் ஆகவோ, வேக வைத்தோ எடுத்துக்கொள்ளலாம்.
கீரை - நீரிழிவு நோயாளிகள் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை சர்க்கரை நோயாளிகளும் கீரையை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கீரையில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. கீரை சூப் பொரியல், கூட்டு, சாதம் என ஏதேனும் ஒரு வகையில் கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவாகும். நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை அன்றாட உணவில் எடுத்து கொள்வதால்,இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. வெள்ளரிக்காயை சாலட் ஆகவோ, பச்சையாகவோ எடுத்து கொள்ளலாம்.