சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மகளிர் குழு உறுப்பினர்களும் விண்ணப்பிக்கலாம்!
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்போர், அடிப்படைக் கணினியைக் கையாளும் திறன் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமத் தொகுப்புகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் மதிப்புதியத்தில் 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்கள் கிராமங்களில் செயல்படும் மகளிர் குழுவினை ஒருங்கிணைத்தல், வங்கிகளில் என்னென்ன சலுகைகள் கிராமங்களுக்கு வழங்கப்படும் என்பது போன்றவற்றை தெரிந்துக்கொண்டு அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருப்பதோடு, நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் வேறு என்ன தகுதிகள் தேவை என்பது இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்..
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
கிராம ஊராட்சி ஒன்றியங்களில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நன்றாக எழுத, படிக்கவும், நல்ல கணக்கீடும் திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். இதோடு ஊராட்சிஅளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதே அதே தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட உறுப்பினராக இருத்தல் அவசியம்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நல்ல தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். மக்களின் தேவைகளை நிறைவேற்ற வங்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதால், முதலில் விண்ணப்பிப்போர் கிராமத்திற்கு அருகில் உள்ள வங்கிகளுக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
அடிப்படைக் கணினியைக் கையாளும் திறன் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் வைத்திருப்பதோடு அதில் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பத் தெரிந்திருப்பது அவசியம். குறிப்பாக நீண்ட காலகடன் நிலுவை உள்ளவர்களாக இருக்க கூடாது என்ற தகுதியும் உள்ளது.
பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு, மேற்கண்ட தகுதியுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது விண்ணப்பங்களைத் தாங்கள் சார்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக இன்றைக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212-இல் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் விபரங்களை www.//cdn.s3wass.gov.in/s3bbf94b34eb32268ada57a3be50 என்ற பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துகொள்ளவும்.