India Post Recruitment: 10ஆம் வகுப்பு போதும்... தபால் துறையில் 28 ஆயிரம்+ காலியிடங்கள்! தேர்வு கிடையாது, நேரடி வேலை!
India Post GDS Recruitment 2026: பத்தாம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே தகுதி என்பதால், கிராமப்புற மாணவர்களுக்கு கிராமின் டக் சேவக் பணி, ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

மத்திய அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறை 2026-ம் ஆண்டிற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டங்களில் காலியாக உள்ள கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது. சுமார் 28,740 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜனவரி 31, 2026 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கிளை அஞ்சல் அதிகாரி (BPM), உதவி கிளை அஞ்சல் அதிகாரி (ABPM) மற்றும் தபால் விநியோகம் செய்யும் கிராமின் டக் சேவக் (GDS) ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு கிடையாது
இந்த வேலைவாய்ப்பின் மிகப் பெரிய சிறப்பம்சமே தேர்வு முறைதான். பொதுவாக அரசு வேலை என்றாலே கடினமான போட்டித் தேர்வுகள் இருக்கும். ஆனால், இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வுகள் எதுவும் கிடையாது.
யார் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு.
சம்பளம் எவ்வளவு?
தேர்வாகும் நபர்களுக்கு நல்ல சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி கிளை அஞ்சல் அதிகாரி மற்றும் டக் சேவக் பணியிடங்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையிலும், கிளை அஞ்சல் அதிகாரி (BPM) பணியிடங்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பப் பதிவு ஜனவரி 31, 2026 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 14, 2026 ஆகும். தேர்வுக் கட்டணம் செலுத்த பிப்ரவரி 16 வரை அவகாசம் உள்ளது. விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருந்தால், அதைத் திருத்தம் செய்வதற்கு பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான தரவரிசைப் பட்டியல் (Merit List) பிப்ரவரி 28, 2026 அன்று வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி நேரத்தில் இணையதள நெரிசலைத் தவிர்க்க, ஆர்வம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே தகுதி என்பதால், கிராமப்புற மாணவர்களுக்கு இதுவொரு பொன்னான வாய்ப்பாகும்.
கூடுதல் தகவலுக்கு: indiapostgdsonline.gov.in






















