Digital Rupee: கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக வருகிறது புதிய டிஜிட்டல் ரூபாய்: முழு விபரம் இதோ!
டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் வெவ்வேறு. இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், இந்த டிஜிட்டல் நாணயம் வெளியாக உள்ளது.
![Digital Rupee: கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக வருகிறது புதிய டிஜிட்டல் ரூபாய்: முழு விபரம் இதோ! Digital Rupee: Why India Is Keen On Introducing A CBDC Digital Rupee: கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக வருகிறது புதிய டிஜிட்டல் ரூபாய்: முழு விபரம் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/13/dc1829f07a7e1f836e7347902717a2291660369530089175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் ரூபாய் (central bank digital currency (CBDC).) அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி இந்தாண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் ரூபாய் ( சிபிடிசி எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்- central bank digital currency) வெளியிடப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்று கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டிருந்தது. 2022-23 முதல் இந்தப் பணம் வெளியிடப்படும்.
டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் ஒன்றா?
டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் ஒன்றல்ல. இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், இந்த டிஜிட்டல் நாணயம் வெளியாக உள்ளது. இது மத்திய வங்கியால் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பணமாகும். இந்த டிஜிட்டல் நாணயம் காகிதத்தில் அச்சிடப்படும் பணத்தைப் போன்றதுதான். அதே மதிப்பு கொண்டது.
அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதாக இருக்கும். அரசு அச்சடிக்கும் பணத்துடன் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். டிஜிட்டல் வடிவில் இருப்பது மட்டுமே ஒரே வித்தியாசமாகும். மேலும், இதற்கு பணத்திற்கு இருப்பது போல, நிதித்துறை வங்கிகள் செயல்படாது. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை ரிசர்வ் வங்கியின் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படும்.
கிரிப்டோகரன்சி அல்ல
அதே நேரத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (சிபிடிசி) கிரிப்டோகரன்சி அல்ல என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். எனினும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பாதுகாப்புடன் இயங்கும் வகையில், டிஜிட்டல் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி தயாரிக்கும்.
ஏன் டிஜிட்டல் நாணயம்?
மக்களின் பரிமாற்ற வசதிக்காகவும் பிற பாதுகாப்புக் குறைவான தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தைத் தடுக்கவும் டிஜிட்டல் ரூபாய் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல கிரிப்டோகரன்சி உள்ளிட்ட தனியார் மெய்நிகர் பணப் பரிமாற்றத்துக்கு செக் வைக்கவும், அரசே டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்கிறது.
மேலும், இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிக் இருக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பானதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் பிட்காயின் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகள் மூலம் பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவை நடைபெறாமல் தடுக்கப்படும். அதேபோல கோடிக்கணக்கில் செலவு செய்து, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தேவையும் குறையும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும்.
30% வரி:
தனியார் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்குக் கடிவாளம் போடும் விதமாக, டிஜிட்டல் முறை சொத்து பரிமாற்றங்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக 1 சதவீதப் பரிவர்த்தனை வரி விதிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்த டிஜிட்டல் ரூபாய் முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், பண பரிவர்த்தனைகளுக்கு வங்கி அமைப்புகளை நாடுவது குறைந்துவிடும். பொதுமக்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளும் வசதிதான். ஆனால், இதனால் பண புழக்கம் குறையும், பரிவர்தனைகளில் வங்கி அமைப்புகளின் பங்கு குறையும். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)