Dengue Fever: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்.. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்ஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. ”தேங்கி நிற்கும் நீரின் மூலமே கொசு உற்பத்தி அதிகமாகி, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர், காய்ச்சல் வந்துவிட்டால், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
”பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் பொது சுகாதாரத்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
”மேல்நிலை கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும் குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும், அதேபோல் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
”ஏடிஸ் கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது . மேலும் இது தலைவலி, தசைவலி, மூட்டு வலி, குமட்டல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. மழைக்காலங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொசுக்கள் கடிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொள்வதுடன் கொசு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பெற்றோர்கள் டெங்கு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும். அதேபோல் பள்ளிக்குச் செல்லும் போதோ அல்லது வெளியில் விளையாடும் போதோ குழந்தைகள் முழுக்கை ஆடைகளை அணிந்திருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனால் குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க முடியும்” என கூறுகின்றனர்.
இதற்கிடையே, டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அதேபோல, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )