கரூரில் குட்கா விற்ற 8 கடைகளுக்கு சீல் - 17.5 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம்
கரூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைவிதிக்கப்பட் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறையினர் வெங்கமேடு, வெள்ளியணை, லாலாபேட்டை, புன்னம், பஞ்சப்பட்டி, குளித்தலை உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதன் அடிப்படையில், கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள எஸ்.மார்ட் மளிகைக்கடை, வெண்ணமலையில் உள்ள லெட்சுமி மளிகைக்கடை, சிவா டீ ஸ்டால் ஆகிய இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யபப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது ஆய்வின் போது கண்டறியப்பட்டதால் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் மேற்சொன்ன கடைகளுக்கு நேரில் சென்று கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், உழவர்சந்தை அருகில் உள்ள மளிகை பொருட்கள் மொத்த விற்பனைக் கடைகளிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். முதல்வரின் வழிகாட்டுதலின்படியும், அறிவுறுத்தலின் படியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் நடைபெற்ற பள்ளி தலைமையாசிரியர்களின் ஆய்வு கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் இடையே புகையிலை, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், எந்தெந்த கடைகளில் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றது என்பது குறித்த தகவல்கள் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு கடைகளில் இருந்தும் 7.5 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்த கடைகள் சீல்வைக்கப்பட்டு, அவர்களின் உரிமங்களை ரத்து செய்வதற்கும், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுபோன்ற பொருட்களை விற்கக்கூடாது. மீறி விற்போர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்படுகின்றது. நம் வீட்டு குழந்தைகளுக்கு இதுபோன்ற போதை பொருட்களை கொடுக்க முன்வருவோமா என்பதை விற்பனையாளர்கள் சிந்திக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவோர் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவர். சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )