உடலுறவின்போது பெரும்பாலும் செய்யும் தவறுகள் இதுதான்... அதற்கு காரணமும் உண்டு!
உடலுறவு மேற்கொள்ளும்போது பாதுகாப்புக்காக சில வழிமுறைகளைப் பின்பற்றினாலும், சில தவறுகளை நாம் தவறுகள் என்றே தெரியாமல் மேற்கொள்வது உண்டு. அவ்வாறான தவறுகள் என்ன, அவற்றை எப்படி தடுக்கலாம்?
உடலுறவு மேற்கொள்ளும்போது பாதுகாப்புக்காக சில வழிமுறைகளைப் பின்பற்றினாலும், சில தவறுகளை நாம் தவறுகள் என்றே தெரியாமல் மேற்கொள்வது உண்டு. அவ்வாறான தவறுகள் என்ன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பதற்கான மினி கையேடு இது..
1. பால்வினை நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பது
பால்வினை நோய்கள் இருந்தால் தெரியும்தானே? பிறகு ஏன் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பு. பால்வினை நோய்கள் இருந்தால் அவற்றின் அறிகுறிகள் மிகக் குறைவாகத் தென்படுவதோ, அல்லது முழுமையாகத் தென்படாமல் போவதோ நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். செக்ஸ் வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் இதுகுறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். ரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
2. ஆணுறையைத் தவறாக அணிவது
ஆணுறை பயன்படுத்துவதால் பால்வினை நோய், எதிர்பாராமல் கருவுறுதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். எனினும் ஆணுறையைச் சரியாகப் பயன்படுத்தினால் தான் இந்தப் பாதுகாப்பு. ஆணுறைச் சரியாக அணிந்துகொண்டு, அதனுள் காற்று புகுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலுறவு முடிந்தபின், ஆணுறையின் கீழ்ப்பகுதியைப் பிடித்து, அதனை அகற்ற வேண்டும்.
3. காலாவதியான ஆணுறையைப் பயன்படுத்துவது
ஆணுறையைப் பயன்படுத்தும் முன் அதன் காலாவதி தேதியைச் சரிபார்த்துக் கொள்ளவும். காலாவதியான ஆணுறைகளைப் பயன்படுத்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது.
4. குடும்பக் கட்டுப்பாடு முறைகளால் பால்வினை நோய்களைத் தடுக்க முடியும் என நம்புவது
பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கான நிச்சயமான ஒரே முறை, உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு மாத்திரைகள் முதலானவற்றைப் பயன்படுத்தினாலும், பால்வினை நோய்கள் வரலாம். ஆணுறை பயன்படுத்துவதால் பால்வினை நோய்கள் வருவதிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
5. ஆசனவாய்ப் புணர்ச்சி மூலமாக கருவுறுதலைத் தடுப்பது
ஆசனவாய்ப் புணர்ச்சி மூலமாக கருவுறும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற போதும், ஆசனவாய்ப் பகுதியில் இருந்து பெண்ணுறுப்புக்கு விந்தணுக்கள் நகர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், ஆசனவாய்ப் புணர்ச்சியின் போது, ஆணுறைகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
6. மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் கருவுறுதற்கான வாய்ப்புகள் குறையும் என்று பரவலாக நம்பிக்கை உண்டு. ஆனால், அது அப்படியல்ல. மாதவிடாய் காலத்திலும் உடலில் நுழையும் விந்தணுக்கள் சுமார் 4 முதல் 5 நாள்கள் வரை உயிர் வாழ்ந்து, கருவுறச் செய்யலாம்.
7. முதல் முறை பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது
முதல் முறை உடலுறவு கொள்ளும் போது, கருவுறுதல் நிகழாது என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் தவறானது. எப்போது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஆணுறை உள்பட உடலுறவுக்கான பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
8. விந்தணு வெளியேறும் போது, உடலுறவை நிறுத்துதல்
விந்தணு வெளியேறும் போது, ஆணுறுப்பை வெளியில் எடுப்பதால் கருவுறுதல் நிகழாது என்ற நம்பிக்கையும் பரவலாக உண்டு. எனினும், இந்த முறையைப் பின்பற்றினாலும், பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவத்தில் விந்தணு கலந்து, கருவுற வாய்ப்புகள் உண்டு. மேலும், இந்த முறையில் பால்வினை நோய்களிடம் இருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை.
9. பால்வினை நோய்க்கான அறிகுறிகள் இல்லையென்பதால் ஆணுறையைத் தவிர்ப்பது
எந்தவித அறிகுறியும் இல்லாமல், பால்வினை நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் ஆணுறையைப் பயன்படுத்தவதோடு, அடிக்கடி பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
10 பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்து கருவுறுதலைத் தடுப்பது
உடலுறவுக்குப் பின், சில ஸ்பெஷல் மருந்துகளைப் பயன்படுத்தி பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்தாலும், கருவுறுதலில் இருந்தும், பால்வினை நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெற முடியாது. மேலும், இதுபோன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதால் கருப்பையில் நோய் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பெண்ணுறுப்பு தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் தன்மை உடையது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )