சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
நீங்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மாத்திரைகள் எடுப்பது உங்களை ரத்தம் கொடையாக தருவதில் இருந்து தடுக்காது.

நீரிழிவு/ டயாபடிஸ் நோயாளிகள் ரத்தம் கொடையாக வழங்கலாமா என்று பெரும்பாலானவர்கள் கேள்வி எழுப்புவர். இதற்கான விளக்கத்தை பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:
சர்க்கரை நோயர் - டாக்டர்.. என் பொன்னுக்கு சிசேரியன் டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்கோம்.
அவளுக்கு ரேர் ப்ளட் க்ரூப். ஓஜிசியன் ரெண்டு யூனிட் ரத்தம் ரெடியா வச்சுருக்க சொல்லிருக்காங்க. எனக்கும் அதே ப்ளட் க்ரூப்தான். ஆனா நான் கடந்த பத்து வருசமா டயாபடிக். நான் அவளுக்கு ப்ளட் டொனேட் பண்ண முடியுமா டாக்டர்???
டாக்டர் - தாராளமா டயாபடிக்குகள் ரத்தம் தரலாம். ரத்த தேவை என்பதே அவசர கால நிலை. உங்க ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கிறீர்களா என்பதே முக்கியம்.
நோயர் - ஆம் என்றே நினைக்கிறேன்... ஆனால் கட்டுக்குள் என்றால் அதற்கு என்ன வரையறை என்று கூறினால் என்னால் மிகச் சரியான பதிலை கூற முடியும்.
டாக்டர் - உங்களது மூன்று மாத சராசரி சர்க்கரை அளவுகள் Hba1c 7 %க்குள் இருக்கிறதா?
உங்களது காலை வெறும் வயிற்று சர்க்கரை அளவுகள் 140 mg/dl என்ற அளவுக்குள்ளும்
உணவு உண்ட பின் பார்க்கும் post prandial blood sugar 200mg/dl என்ற அளவுக்குள் இருந்தால் தாராளமாக ரத்தம் கொடையாக வழங்கலாம்.
நோயர் - நீங்கள் கூறுவது போலவே எனது Hba1c 6.4 % மற்றும் காலை வெறும் வயிற்றில் 110mg/dl சாப்பிட்ட பின் 150mg/dl இருக்கிறது ஆனால் நான் சர்க்கரைக்கு மாத்திரை எடுத்து வருகிறேனே? பிரச்சனை இல்லையா?
டாக்டர்- நீங்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மாத்திரைகள் எடுப்பது உங்களை ரத்தம் கொடையாக தருவதில் இருந்து தடுக்காது.
இருப்பினும் கடந்த ஒரு மாத காலமாக ஒரே அளவு ஒரே வகையான மாத்திரைகளை மாற்றம் இல்லாமல் எடுத்திருக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்திற்குள் உங்கள் மருத்துவர் நீங்கள் எடுக்கும் மாத்திரையை மாற்றியிருந்தாலோ/ டோஸ் அளவை கூட்டியிருந்தாலோ இந்த மாற்றப்பட்ட அளவில் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்து ஒரு மாதம் சென்ற பின்னரே ரத்தம் கொடுக்க முடியும்.
நோயர் - நன்றி டாக்டர். நான் கடந்த ஒரு வருடமாக ஒரே மாத்திரைதான் உட்கொண்டு வருகிறேன். எனது நண்பர் ஒருவருக்கு இதே ரத்த க்ரூப் தான் ஆனால் அவர் இன்சுலின் போட்டு வருகிறார். நல்ல கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். அவரும் ரத்தம் கொடுக்கலாமா??
டாக்டர் - இன்சுலின் உபயோகித்து வந்தால் ரத்தம் தருவது தடை செய்யப்பட்டது. காரணம் - இன்சுலின் போட்டு ரத்தம் கொடுப்பவருக்கு "தாழ் ரத்த சர்க்கரை நிலை" (Hypoglycemia) ஏற்படும் வாய்ப்பு இருப்பதே காரணம்.
இன்சுலின் கட்டாயம் தேவைப்படும் டைப் ஒன்று மற்றும் இன்சுலின் மூலம் ரத்த சர்க்கரையை குறைக்கும் டைப் டூ டயாபடிஸ் இருப்பவர்களும் ரத்தம் கொடுப்பது கூடாது. இது கொடுப்பவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்பதாலேயே தவிர்க்கப்பட வேண்டும்.
நோயர் - ஓ..ஓகே டாக்டர்.. நீரிழிவு உள்ளவர்களில் வேறு யாரெல்லாம் ரத்தம் கொடையாக வழங்கக்கூடாது???
டாக்டர் - நீரிழிவுடன் சேர்த்து
- இன்சுலின் உபயோகிப்பவர்கள்
- இதய நோய் இருப்பவர்கள்
- கடந்த ஆறு மாதத்திற்குள் இதய நோய்க்கு ஸ்டெண்ட்/ பைபாஸ் செய்யப்பட்டவர்கள்
- கல்லீரல் நோய் இருப்பவர்கள்
- சிறுநீரக நோய் இருப்பவர்கள்
- கை கால் மதமதப்பு போன்ற நியூரோபதி அறிகுறிகள் கொண்டவர்கள்.
7.Hba1c 7க்கு மேல் இருப்பவர்கள்
- ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்கள்
மேற்சொன்ன அனைவரும் ரத்தம் கொடையாக கொடுக்காமல் இருப்பது கொடையாளர்களுக்கு நல்லது என்ற காரணத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இவையன்றி சில மருந்துகளை எடுப்பவர்களும் ரத்தம் கொடுக்க தடை செய்யப்பட்டவர்களாவர்.அந்த மருந்துகள் பின்வருமாறு:
1980க்கு பிறகு ப்ரிட்டனில் கண்டறியப்பட்ட மாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட Bovine Insulin உபயோகித்தவர்கள்.
Mad cow disease பரவும் அபாயம் இருப்பதால் இந்த வாழ்நாள் தடை. நமது நாட்டில் அந்த இன்சுலினை உபயோகித்தவர்கள் இருக்க வாய்ப்பு குறைவு. அப்படியே உபயோகித்திருந்தாலும் மிக வயோதிகராய்த்தான் இருப்பார்கள்.
பிறவி வளர்ச்சி குன்றியவர்களுக்காக பிரேதங்களிடம் இருந்து 1995க்கு முன் உருவாக்கப்பட்ட Human Growth Hormone எடுத்துக்கொண்டவர்கள். இது 1995தடை செய்யப்பட்டு இப்போது Recombinant முறைப்படி தயாரிக்கப்படுகிறது.
RECOMBINANT GROWTH HORMONE எடுத்தவர்கள் ரத்தம் கொடுக்கலாம்.
ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும் மருந்துகளான
1.வார்ஃபாரின் (Coumadin/ warfarin)
- ஹெபாரின் (Heparin/ enoxaparin)
3.டபிகாட்ரான் (Dabigatran and its allies)
- ரிவராக்சபான் (Rivoraxaban and its allies)
மேற்சொன்ன மருந்துகளை எடுப்பவர்கள்
ஏழு நாட்கள் இந்த மருந்துகளை நிறுத்திய பின் மட்டுமே ரத்தம் கொடுக்க முடியும். இது குறித்து உங்கள் மருத்துவர்தான் முடிவு செய்ய முடியும்.
Dutasteride என்ற ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கான மாத்திரையை எடுப்பவர்கள் ஆறு மாதங்களுக்கு ரத்த தானம் அளிக்கக்கூடாது.
Finasteride மாத்திரை ( இளைஞர்களுக்கு முடி கொட்டுவதற்கு அதிகமாக தரப்படும் மாத்திரை) எடுத்தால் முப்பது நாள் கழித்துதான் ரத்தம் வழங்க வேண்டும்.
Piroxicam என்ற வலி நிவாரணியை எடுத்தவர்கள் ஆறு மாதங்கள் ரத்தம் கொடுக்க கூடாது.
Hepatitis B தொற்று ஏற்பட்டு அதற்கு மாற்று மருந்தான Hepatitis B Immune Globulin எடுத்தவர்கள் 12 மாதங்கள் காத்திருந்து hepatitis B தொற்று இல்லை என்று நிரூபிக்க வேண்டும்
நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி பெற்றவர்கள் கடைசி தடுப்பூசி பெற்றதில் இருந்து ஒரு வருடம் கழிந்த பின்பே ரத்த தானம் வழங்கலாம்
எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno suppressive drugs எடுப்பவர்கள் . ரத்தம் கொடுப்பதற்கு கட்டாயமாக மருத்துவர் அறிவுரை கேட்க வேண்டும்
clopidogrel / Ticlopidine போன்ற ரத்த தட்டணுக்கள் செயல்பாட்டை குறைத்து ரத்தம் உறையும் தன்மையை தடுப்பான்களை மாத்திரைகளாக எடுப்பவர்கள் தட்டணுக்கள்(Platelet transfusion) மட்டும் தர வேண்டும் என்றால் 14 நாட்கள் பொறுக்க வேண்டும். முழு ரத்த கொடையாக( whole blood transfusion) இருப்பின் காத்திருப்பு தேவையில்லை.
சோரியாசிஸ் நோய்க்கு தரப்படும் Acitretin எடுத்தால் கட்டாயம் மூன்று வருடங்களுக்கு ரத்தம் கொடையாக வழங்கக்கூடாது.
Isotretinoin எடுத்தால் முப்பது நாட்கள் காத்திருப்பு அவசியம்
புகை பிடிப்பவராக இருந்தால் கட்டாயம் ரத்த தரப்போகும் இரண்டு மணிநேரத்திற்கு முன் புகைத்து விட வேண்டும்.
மது அருந்துபவராக இருந்தால் கட்டாயம் ரத்தம் தரப்போகும் நாளுக்கு முன் 24 மணிநேரங்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும்.
மது அடிமைத்தனத்தில் இருந்து விடுபட எடுக்கும் Disulfiram மாத்திரையை உபயோகித்து வருபவரானால் கட்டாயம் அதை நிறுத்தி 14 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.
ஏதேனும் சந்தைக்கு இன்னும் வராத புதிய மருந்து/தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் பங்கேற்பாளராக இருந்தால் கட்டாயம் 12 மாதங்களுக்கு ரத்தம் வழங்கக்கூடாது.
மேற்சொன்ன மருந்துகளை உண்பவர்கள் கட்டாயம் உங்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை நிறுத்தக்கூடாது. மேலும் தங்கள் நோய்குறிகளுக்கு மேற்சொன்ன மருந்துகளை எடுப்பவர்கள் - அவற்றை நிறுத்துவது ப்ராக்டிகல் இல்லை என்பதால் மேற்சொன்ன அனைவரும் ரத்தம் கொடுக்க கூடாது.

நோயர் - நன்றி டாக்டர் . நான் ரத்தம் கொடுக்கப்போவதை நினைத்தாலேம் சந்தோசமாக இருக்கிறது. டயாபடிக் வந்து விட்டதால் இனி வாழ்க்கையில் ரத்தமே வழங்க முடியாது என்று நினைத்திருந்தேன். இப்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
டாக்டர் - டயாபடிஸ் என்பது தீண்டத்தகாத நோய் அல்ல . டயாபடிக் வந்தவர்களும் மனிதர்களே. இன்னும் சொல்லப்போனால் டயாபடிக் வந்த மக்கள் மற்ற குடும்பத்தாரை விட உடல் நல அக்கறையில் அதிக அக்கறை கொண்டு மற்றவர்களை விட சில வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
போய் ஜாலியா ரத்தம் கொடுங்க..
நீங்கள் டைப் டூ டயாபடிக் என்பதோ
டயாபடிஸ்க்கு மாத்திரைகள் எடுப்பதோ
ரத்தம் கொடையாக கொடுப்பதற்கு தடை அல்ல.
இன்சுலின் போடாமல்
கடந்த ஒரு மாத காலமாக மாத்திரைகளின் அளவு மற்றும் வெரைட்டி மாறாமல் எடுத்து
உங்கள் சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்குமானால்
நீங்களும் ரத்த கொடையாளர்தான்’’ என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















