ஓமிக்ரான் வைரஸ்: பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும் இந்தியா?
உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா வைரஸூம் அவ்வப்போது உருமாறிய புதிய வகையாக தொடர்ந்து நம்மை அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பி.1.1.529 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை வைரஸிற்கு ஓமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தான வகை வைரஸ் என்று உலக சுகாதார மையம் கடந்த திங்கட்கிழமை அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில் அந்த வைரஸ் என்ன? அது எங்கே கண்டறியப்பட்டது? அதன் அறிகுறிகள் என்னென்ன?
ஓமிக்ரான் வைரஸ் மற்றும் கண்டறியும் முறை:
ஓமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்கா நாட்டில் முதலில் பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இருந்து சமீபத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்ற பயணிகளின் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த வைரஸ் வகை புதிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பையும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை உதவியுடன் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
ஓமிக்ரான் வைரஸ் தன்மை மற்றும் அறிகுறிகள்:
ஓமிக்ரான் வைரஸின் முழுமையான தன்மை எப்படி என்று தெரியவில்லை. அத்துடன் அது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என்பது தொடர்பாகவும் தற்போது வரை எந்தவித தகவலும் இல்லை. அதேபோல் இந்த வகை வைரஸ் தொற்றிற்கு புதிதாக அறிகுறிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த நோய் பாதிப்பிற்கு சிகிச்சை அளித்த தென்னாப்பிரிக்க மருத்துவர் ஒருவர் கூறும் போது, “இந்த வகை வைரஸ் பாதிப்பு இருந்தால் அதிக தலைவலி, உடல் அயர்ச்சி தொண்டை கரகரப்பு ஆகியவை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்ய வேண்டியது என்ன?
வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளை இந்திய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும். மேலும் இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். இவை தவிர வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 96 மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் ஃபைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லொவிட் மற்றும் மெர்க் நிறுவனத்தின் மொலின்பிராவிர் மருந்து ஆகியவற்றை தேவையான அளவு சேகரித்து வைக்க வேண்டும். முக்கியமாக மக்களிடம் மீண்டும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பாதிப்பின் வீரியம் இன்னும் சரியாக தெரியவில்லை என்பதால் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுக்காக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாக உள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பில்லை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )