சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு செய்த புதுக்கோட்டை கலெக்டர்! IAS கவிதா ராமுவுக்கு குவியும் பாராட்டுகள்!
ஊரடங்கு நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு 5 கிமீ சைக்கிளில் சென்று ஆய்வுசெய்தார்.
![சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு செய்த புதுக்கோட்டை கலெக்டர்! IAS கவிதா ராமுவுக்கு குவியும் பாராட்டுகள்! Pudukottai Collector who went on a bicycle and inspected raining wishes for IAS Kavita Ramu சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு செய்த புதுக்கோட்டை கலெக்டர்! IAS கவிதா ராமுவுக்கு குவியும் பாராட்டுகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/10/7877444227f269f63f2816f0dbd2add5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆட்சியர் இருக்கின்றார்கள். ஆனால் சில மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக தனித்தன்மையுடன் இருப்பார்கள். அப்படி ஒரு ஆட்சியர்தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
நேற்று கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போடப்பட்டிருந்தது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சைக்கிளிலேயே சென்று ஊர் முழுவதும் ஆய்வு செய்தார். கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கடந்த 2021 ஜூன் மாதம் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதல் பல அதிரடிகளை செய்து வருபவர். வித்தியாசமான கலெக்டர் என பெயரெடுத்தவர்.
புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு 5 கிமீ தூரம் சைக்கிளில் சென்று நகரின் முக்கிய வீதிகளில் ஆய்வு செய்ததோடு பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில் போலீசாரும் தொடர்ந்து வாகன தணிக்கை மற்றும் தேவை இல்லாமல் பொது வெளிகளில் சென்று திரியும் அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகர் பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் வாகன தணிக்கையினையும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதனையும் ஆய்வு செய்யவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள சாலைகளில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மிதிவண்டியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம்,வடக்கு ராஜவீதி,மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் அபராதம் விதிக்கும் பணியினை ஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு அபராத புத்தகத்தை வாங்கிப் பார்த்து எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். மாஸ்க் இல்லாமல் வந்தவர்களுக்கு மாஸ்க் அணிய சொல்லி அறிவுரை வழங்கியதுடன் அவர்களுக்கும் மாஸ்க் கொடுத்து அணிய சொன்னார்.
இந்த செயலை செய்த கலெக்டர் கவிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக இருந்த கவிதா ராமு புதுகோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இங்கு ஆட்சியராக இருந்த பி. உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 3 பேர் குணமடைந்தனர். இதனால் ‘டிஸ்சார்ஜ்' ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 963 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)