Corona Third Wave: மூன்றாவது அலை... ‛ஆன் தி வே...’ -ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
விதிமுறைகளை மீறுவது மற்றும் தடுப்பூசி போடாத மக்கள் கூட்டமாக செல்வது கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்திறன்மிக்க தலைமையும், நவீன மருத்துவ சகோதரத்துவத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளும் கொண்ட இந்தியா, கொரோனா இரண்டாவது அலைகளிலிருந்து மீண்டு வருகிறது. எந்தவொரு தொற்றுநோய்களின் வரலாற்றிலும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. ஆனால் கொரோனா வைரஸ்க்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகால போராடிய அனுபவம் மற்றும் வளர்ந்து வரும் ஆதாரங்களின் அடிப்படையில், தடுப்பூசி அதிகளவில் மக்களை அடையச் செய்வதோடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் நாம் மூன்றாவது அலையை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு தணிக்க முடியும். இருப்பினும், இந்த முக்கியமான நேரத்தில் ஒவ்வொருவரும் மூன்றாவது அலையைத் தணிக்க உழைக்க வேண்டியது அவசியம். நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்கமும் பொதுமக்களும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் கூட்டமாக கூடி வருகின்றனர். சுற்றுலா தலம், யாத்திரை இடங்களிலும் இதேபோல் கூட்டம் காணப்படுகிறது. இவை அனைத்தும் நமக்கு தேவையான ஒன்றுதான். ஆனால் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம். விதிமுறைகளை மீறுவது மற்றும் தடுப்பூசி போடாத மக்கள் கூட்டமாக செல்வது கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.
IMA HQs. Press Release 12.07.2021 pic.twitter.com/ZhmbpezPUD
— Indian Medical Association (@IMAIndiaOrg) July 12, 2021
மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிப்பது, கடைசியாக பொருளாதாரத்தின் மீதே பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கூட்டமாக கூடுவதை தவிர்த்து, அதன் மூலம் பொருளாதார இழப்பை சந்திக்காமல் இருப்பது சிறந்ததாக இருக்கும். இந்த தருணத்தில் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் இது. குறைந்தபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொருவரும் தடுப்பூசி போடுவதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநில அரசுகளும், எந்தவொரு பொது கூட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை தி.நகரில் நேற்று பொதுமக்கள் கொரோனா குறித்த எந்தவொரு அச்சமும் இல்லாமல் கூடி பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில், பொதுஇடங்களில் மக்களின் கூட்டம் இன்று அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவல் முடிந்துவிட்டதாக மக்கள் எண்ணக் கூடாது என்றும், தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். கொரோனா 3ஆம் அலை வராமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கடைகளும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுகொண்டார். இதனைத்தொடர்ந்து, தி.நகரில் விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )