(Source: ECI/ABP News/ABP Majha)
Corona Death : தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு.. மீண்டும் அச்சுறுத்தும் பெருந்தொற்று..
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நேற்று நீண்ட நாட்களுககு பிறகு கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியுள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்கு பின் ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் கொரோனா பாதிக்கப்பட்டிருந்த 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வேறு எந்தவித இணை நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 1,938 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 169 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று 476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 213 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 57 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தற்போது 53 ஆயிரத்து 637 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் மொத்தம் 11 பேர் நேற்று மட்டும் இந்தியா முழுவதும் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 624 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2.35 சதவீதமாக கொரோனா பாதிப்பு விகிதம் தற்போது பதிவாகியுள்ளது. இந்தியாவில் நேற்று காலை மட்டும் 8 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை மட்டும் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உயர்ந்திருப்பது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்