’கரூரில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’- இலக்கு 50 ஆயிரம் ஆனால் போட்டதோ 61 ஆயிரம்...!
’’மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 41 ஆயிரத்து 825 பேரும், 2 வது தவணை தடுப்பூசியை 19 ஆயிரத்து 899 பேரும் என்று மொத்தம் 61 ஆயிரத்து 724 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்’’
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் விடுமுறைநாளான நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையான 9 லட்சத்து 3ஆயிரத்து 245 பேரில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 300 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 742 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 4 லட்சத்து 93 ஆயிரத்து 945 பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் நிலையில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி 41 ஆயிரத்து 825 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 19 ஆயிரத்து 899 பேருக்கும் என்று மொத்தம் 61 ஆயிரத்து 724 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 5.23 லட்சமாக அதிரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் 4.52 ஆயிரம் பேர் உள்ள நிலையில், 93 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்த ஒரு நாள் முகாம் மூலம் கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேருக்கு போடப்பட்டது. ஊரக பகுதிகள் மற்றும் நகர் புறங்களில் சுகாதார செவிலியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் என்று அனைவரும் வீடு வீடாகச்சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கி அவர்கள் எப்போது முகாமிற்கு வரவேண்டும், வீட்டிற்கு அருகாமையில் எங்கு முகாம் நடக்கிறது என்ற விபரத்தை தெரிவித்தனர்.
மேலும், இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்த விபரங்களான பெயர், வயது, என்னவகை தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆதார் அட்டை எண், முதல் தவணையா அல்லது 2 வது தவணையா என்பது குறித்த தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தளவாபாளையம் குமாரசாமி கல்லூரி, கரூர் நகராட்சி அலுவலகம் மற்றும் புகளூர் காகித ஆலை பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த பணியில் 200க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வுப் பணியில் பொது சுகாதார இணை இயக்குனர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், நகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )