காபி, ப்ரோக்கோலி, பூண்டு… வேறென்ன? பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
கூட்டு குடும்பத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு என்ன கொடுக்க வேண்டும், எது கொடுக்க கூடாது என்று பார்த்து கொடுப்பார்கள். தற்போது அதற்கான வாய்ப்புகள் பலருக்கு குறைவு என்பதால் நாமே அறிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுவதால் அவர்கள் உண்ணும் உணவுகள் குழந்தையை நேரடியாக பாதிக்கும். குழந்தைக்கு ஒவ்வாத உணவுகளை அந்த நேரத்தில் தவிர்க்க வேண்டியது அவசியம். முன்பெல்லாம் கூட்டு குடும்பத்தில் வயதானவர்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு என்ன கொடுக்க வேண்டும், எது கொடுக்க கூடாது என்று பார்த்து பார்த்து கொடுப்பார்கள். தற்போது அதற்கான வாய்ப்புகள் பலருக்கு குறைவு என்பதால் நாமே அதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டும்.
- காபி
காபியில் நிறைய காஃபின் இருப்பதால் அது தாய்ப்பாலில் கலக்க நேரிடும். குழந்தைகளால் காஃபினை பெரியவர்களை போல ஜீரணிக்க முடியாது. அவர்களது உடலில் சேரும் அதிகப்படியான காஃபின் தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் பதட்டத்தை உண்டாக்கும். காஃபின் அதிக அளவில் சேரும்போது அது தாய்ப்பாலில் உள்ள இரும்புச்சத்து அளவை குறைப்பதால் குழந்தைக்கு ஹீமோகுளோபின் அளவும் குறையும். எனவே காபியை முற்றிலுமாக நீக்காமல், குறைவாக எடுத்துக்கொள்வது சிறந்தது.
- சிட்ரஸ் பழங்கள்
வைட்டமின் சி நிறைந்த இந்த சிட்ரஸ் பழங்கள் அமில கூறுகள் காரணமாக குழந்தையின் வயிற்றை எரிச்சலைடய செய்யும். குழந்தைகளின் இரைப்பை குழாய் முதிர்ச்சியடையாததால், இந்த அமில கூறுகளை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல், வாந்தி, போன்ற பிரச்சினைகளை குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும். சிட்ரஸ் பழங்களையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை, அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம். திராட்சைப்பழங்கள், ஆரஞ்சு பழம் என அளவாக எடுத்துகொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், அன்னாசிப்பழம் என வைட்டமின் சி நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துகொள்ளலாம்.
- ப்ரோக்கோலி
பாலூட்டும் தாய்மார்கள் முந்தைய நாள் உணவுக்கு ப்ரோக்கோலி சாப்பிட்டால் அடுத்த நாள் குழந்தைக்கு வாயு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மற்றும் வெள்ளரி போன்ற பிற வாயு சேர்ந்த உணவுகள் தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டும். குறிப்பாக முதல் ஆறு வாரங்கள் வரை சுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பிறகு படிப்படியாக சேர்க்கலாம்.
- பூண்டு
பூண்டு தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் என்று கூறினாலும், அது தாய்ப்பாலில் பூண்டின் வாசனையை உண்டாக்கும். சில குழந்தைகள் இந்த பூண்டின் வாசனையை வெறுப்பார்கள், சிலர் விரும்புவார்கள். குழந்தை பால் குடிக்கும் போது சங்கடமாக உணர்ந்தால் இன்ஷா குழந்தைக்கு பூண்டின் வாசம் பிடிக்கவில்லை என்று அறிந்துகொள்ளலாம். அதனை கண்டறிந்து சேர்த்துக்கொள்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.
- மது
தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஆல்கஹால் உங்கள் உடலில் பல மாற்றங்களைச் ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் ஆல்கஹால் அருந்துவதால் அது தாய்ப்பாலின் அளவினை குறைக்கிறது. அதாவது 20 % முதல் 23% வரையிலான தாய்ப்பாலின் அளவு குறைகிறது என்று ஆய்வு கூறுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். குழந்தையின் ஆரம்பக் காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே ஊட்டச்சத்து தாய்ப்பால் தான், அதன் அளவு குறைந்தால் அவர்களின் வளர்ச்சியில் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் மட்டும் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )