Cardiac Arrest Symptoms: மாரடைப்பால் அதிகரிக்கும் மரணங்கள்… அறிகுறிகள் இருக்கா? உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
தங்கள் அருகில் யாராவது மாரடைப்பால் சிரமப்படுகிறார் என்று உணர்ந்தால், உடனடியாக அவருக்கு நீங்கள் டிஃபிப்ரிலேட்டர், சிபிஆர் போன்ற உதவிகளை செய்யலாம். அதற்கெல்லாம் முன்பாக அவசர உதவியை அழைக்க வேண்டும்.
பரவலாக கேகே என்று அறியப்படும் இந்தியாவின் பிரபல பாடகர் ஆன கிருஷ்ணமூர்த்தி குன்னத், நேற்று மே 31 அன்று மாரடைப்பால் காலமானார். கல்கத்தாவில் ஒரு நேரலை நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்த போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்த மாரடைப்பு சமீப காலங்களில் இளைஞர்களையும் அதிகமாக பாதிக்கச் செய்கிறது. இந்த மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்னென்ன? அறிகுறிகள் என்ன? வந்தால் உடனடியாக செய்யவேண்டியது என்ன?
பாடகர் கேகே
பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் இதுவரை 3500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களை பாடி வருகிறார். தனது காதல் பாட்டால் 90 கிட்ஸை கிறங்கடித்தவர். தமிழ் திரைப்படங்களில் இவர் 66 பாடல்களை பாடியுள்ளார். மின்சார கனவு படத்தில் வரும் ஸ்டாபெர்ரி கண்ணே பாடல் மிகவும் பிரபலம். அது போல் அன்னியன் படத்தில் வரும் அண்டங்காக்கா கொண்டைகாரி பாடலும் ரசிகர்களை கவர்ந்தது.
மாரடைப்பால் மரணம்
இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் குன்னத் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவால் திரையுலகமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. அவரது நினைவுகளை இசையமைப்பாளர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
உலகளவில் இருதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த பல தசாப்தங்களாக, இந்தியாவில் கரோனரி இதய நோய் பரவல் விகிதம் கிராமப்புற மக்களில் 1.6 முதல் 7.4 சதவீதம் வரையிலும், நகர்ப்புற மக்களில் ஒன்று முதல் 13.2 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், உலகளவில் 17.9 மில்லியன் மக்கள் CVD (cardiovascular disease) ஆல் இறந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் பதிவான மொத்த இறப்புகளில் 63 சதவீதம் தொற்றா நோய்களால் ஏற்பட்டவை. இவற்றில் 27 சதவிகிதம் இறப்புகளுக்கு CVD தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. 40-69 வயதுக்குட்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் இறப்பப்பதற்கும் இந்த நோய்கள்தான் காரணமாகின்றன.
மாரடைப்பு vs கார்டியாக் அரெஸ்ட்
மாரடைப்பு - இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது. இது ஏற்பட்டால் நெஞ்சு வலி - உடல் வியர்க்கும் - தாங்கமுடியாத அளவுக்கு நெஞ்சுப்பகுதி வலி போன்றவை ஏற்படும். மாரடைப்பின் அடுத்தடுத்த நிலையில், கார்டியாக் அரெஸ்ட் உருவாகும்.
கார்டியாக் அரெஸ்ட் - இதயம் செயலற்று போவது (துடிக்காமலேயே இருப்பது) / அதீதமாக துடிப்பது. இதனால் இதயத்துடிப்பில் சீரற்ற தன்மை உருவானால் ஏற்படுவதுதான் கார்டியாக் அரெஸ்ட். இப்படி இதயம் செயலற்று போக, ரத்தக்குழாய் அடைப்பு - வேறு உடல் உபாதைகள் - போதைப்பொருள் உபயோகம் - மரபணு என எந்தக் காரணமாகவும் வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களுக்கு உடனடி முதலுதவி செய்யப்பட வேண்டும்.
அறிகுறிகள்
கைகள், தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை மற்றும் பல் ஆகிய பகுதிகளில் வலியும் அசௌகரியமும் ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் மேல் வயிற்றில் வலியும் உண்டாகும். இவை அன்றி கீழ்க்காணும் இடர்பாடுகள் இருந்தால் அதுவும் மாரடைப்புக்கு வழி வகுக்கும்.
- மார்பில் தீவிரமான அழுத்தம்
- நெஞ்சுப்பகுதி இறுக்கமாக இருப்பது
- மார்பில் குத்துவது போன்ற வலி
- மூச்சு விடுவதில் சிரமம்
- தீவிரமான சோர்வு
- சில்லென்ற வியர்வை
- மயக்கம், தலைசுற்றல்
- செரிமான கோளாறு
காரணம்
இந்த ஒரு காரணத்தால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்று எந்த ஒரு விஷயத்தையும் குறிப்பிட முடியாது. பொதுவாக உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய இரண்டும் ஒருவரின் உடல் நலத்தை பாதிக்கிறது. அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை இவற்றுடன் இணைந்து மோசமான உணவுப் பழக்கம் ஆகியவை இளம் வயதினரிடையே மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமாக இருக்கும் நபர் திடீரென்று மாரடைப்பால் இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது. மேலும் கோவிட் பாதிப்பு நுரையீரலை மட்டுமல்லாமல் இதயத்தையும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இருக்கும் கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகளின் தீவிரத்தை அதிகரிக்கிறது. மேலும் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவசர உதவியை அழைக்கவும்
நாம் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிடும் தன்மையை கொண்டதுதான் மாரடைப்பு, எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். மாரடைப்பு ஏற்பட்ட ஒரு நபர் திடீரென சரிந்து, சுயநினைவை இழந்து, பதிலளிக்க முடியாமல், சாதாரணமாக சுவாசிக்க முடியாமல் இருப்பார். தோள்களில் பலமாக தட்டினாலோ, சத்தமாக அவர்கள் நலமாக உள்ளீர்களா என்று கேட்டாலோ அவர் பதிலளிக்க மாட்டார். மாரடைப்பு ஏற்பட்ட நபருக்கு அருகில் ஒருவர் இருந்தால், உடனடியாக உள்ளூர் அவசர எண்ணை டயல் செய்ய வேண்டும். தமிழகத்தில், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான ஹெல்ப்லைன் எண் 108 ஆகும்.
சிபிஆர் செய்யலாம்
சிபிஆர் என்பது மாரடைப்பு ஏற்பட்டவர்களை உடனடியாக காப்பாற்றக் கூடிய ஒரு சிகிச்சை முறையாகும். கைகளால் செய்யக்கூடிய சிபிஆர் என்பதை, தேர்ந்தவர்கள்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அருகில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒருவர் மூச்சு விடாமல் இருக்கிறார். அல்லது இதயம் செயல்படாமல் இருக்கிறார் என்று அறிந்தீர்கள் ஆனால், இரண்டு கைகளையும் கொண்டு வேகமாக, மார்பு பகுதியில் அடிக்க வேண்டும். அப்படி தொடர்ச்சியாக மார்பு பகுதிக்கு அழுத்தம் கொடுப்பதுதான் சிபிஆர் என்று கூறுவார்கள்.
டிஃபிப்ரிலேட்டர்
AED என்று அழைக்கப்படும் இந்த டிஃபிப்ரிலேட்டரை பயன்படுத்தி உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டவரை மீட்கலாம். இது பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அப்படி அருகில் இருந்தால் அதனை ஆன் செய்து பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தலாம். AED என்பது மின்சாரத்தை செலுத்துவதன் மூலம் இதயத்தை மீண்டும் செயல்பட வைப்பதாகும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )