மழைக்கால நோய்களை தடுக்கும் சித்த மருத்துவம்
Ayurvedic Tips for Rainy Season: சூப்பு வகைகள் தயாரித்து அவ்வப்போது பருகிவர மழைக்கால நோய்களை தவிர்க்கலாம். சூப்பு குடிப்பது மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.
மழை மற்றும் வெயில் பருவநிலை காலத்தில் அந்த சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களை காத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பருவநிலை மாற்றங்கள் வரும் முன்பே அதற்கான விழிப்புணர்வை பொதுமக்கள் தெரிந்து கொண்டு, அதனால் ஏற்படும் நோய்களை தடுத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். விலங்குகள், பறவைகள் பருவ கால சூழலுக்கு ஏற்ப இடம் விட்டு இடம் மாறி தன்னை காத்துக் கொள்ளும் சூழ்நிலை அறிவை தானாக பெற்றுள்ளதால் அவைகள் சமாளித்துக் கொள்கின்றன.
அது போல் மனிதர்கள் அவ்வாறு இடம் விட்டு இடம் மாறிவரும் சூழலை செய்ய இயலாது. சொந்த வீடு, மாடு, மனை, தொழில் என பழகி வாழ்ந்துவரும் சூழலால் தன் வசிப்பிடத்தை மாற்றி இடம் விட்டு இடம் மாற முடியாது. எனவே பருவநிலை சூழலை எதிர்கொள்ள, தடுக்க மருத்துவத்தை பயன்படுத்தலாம்.
வெப்ப நிலையை எதிர்கொள்ளும் திறன் இந்திய மக்களுக்கு நிறையவே இருக்கிறது. எனினும் மழைக்கால தாக்கத்தை எதிர்க்கொள்ள முடியாத சூழலுக்கு இந்த இயற்கை மருத்துவத்தை நாம் நாட வேண்டும். பின்விளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகளும், ஆலோசனைகளும் இருக்கின்றன.
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மழைக்கால நோய்களை சமாளிக்கும் அல்லது எதிர்கொள்ளும் மருத்துவத்தில் கற்பூரவல்லி சிறந்த மருத்துவ மூலிகையாகும் வீட்டில் தொட்டி மூலம் வளர்க்கப்படும் கற்பூரவல்லி “லாமினேயேலியே” எனும் தாவரயின குடும்பத்தைச் சேர்ந்தது. வாசனை மிகுந்த இந்த மருத்துவ மூலிகையினை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். கசப்பு, காரத்தன்மை கொண்ட இச்செடி இலை மிகுந்த மருத்துவ குணத்தை கொண்டது. அதோடு இது சிறந்த கிருமி நாசினி மூலிகையாகும்.
பயன்படுத்தும் முறை: கற்பூரவல்லி இலைகளை கழுவி சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி நீங்கி ஆரோக்கியம் காணலாம். மேலும் அஜீரண கோளாறு, வாந்தி முதலியவற்றை சரி செய்யும் சக்தியை கொண்டது. அதேபோல், கற்பூரவல்லி இலையை அரைத்து அனைத்து வகை கட்டிகளுக்கும் மேலே பூசி வந்தால் கட்டியின் வீக்கம் குறைய செய்யலாம். தொண்டையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இதன் இலையின் சாற்றை தொண்டை மேற்பகுதியில் தடவி வர சிறந்த தீர்வாக அமையும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், கண் அழற்சி மற்றும் நரம்புகளுக்கும் நல்ல மருந்தாக அமையும்.
மழைக்கால நோய்களுக்கு மற்றுமொரு சித்த மருத்துவம் இஞ்சியில் இருக்கிறது. இது நல்ல நறுமணப் பொருளாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் உலர் சருமம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கல், சீரான செரிமானத்தை சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. ஜலதோஷம், தலைவலி போன்றவற்றை சீராக்கி நல்ல இரத்த ஓட்டத்தை செய்யும். நரம்பு மண்டலங்களை தூண்டி இருதயம் மற்றும் சுவாசத்தை சரி செய்கிறது.
பசியைத் தூண்டுதல் உடல் கழிவுகளை வெளியேற்ற இது பெரிதும் உதவுகிறது. இஞ்சி சாறு பாலில் கலந்து பருகிவர வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். இதனால் உடம்பு இளைக்கும். ஒரு துண்டு இஞ்சியை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் தடுக்கும். இஞ்சி சாற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கும்.
அதேபோல் திப்பிலி மழைக்கால பிரச்சனைகளுக்கு சிறந்த சித்த மருந்தாக அமைகிறது. குறிப்பாக உடலில் தேவையில்லாத கரியமில வாயுவினை வெளியேற்றுகிறது.
திப்பிலி உபயோகிக்கும் முறை: திப்பிலியை தேனில் கலந்து கொடுக்க சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணப்படுத்தும். இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால் காய்ச்சல், இரத்தப்போக்கு நீங்கும். இது பெண்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும். மேலும் குழந்தைகளின் குடல் புழுக்களை நீக்க திப்பிலி தீர்வாக இருக்கும். நுரையீரல் நோய்கள், விலா எலும்பு நோய்களுக்கும் மருந்தாக திப்பிலி பயன்படுகிறது. உடல் இளைக்கவும் திப்பிலி பொடி தீர்வாக அமைகிறது.
அதேபோல் மழைக்கால நோயை கட்டுப்படுத்த சுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. சுக்கின் மேல் தோலை நீக்கி காடா துணியில் வைத்துக் கட்டி எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, சிறுதானிய நொய் அரிசியை களைந்து கழுவி பாத்திரத்தில் சேர்த்து துணியில் கட்டிய சுக்கை கஞ்சி பதத்தில் சேர்த்து காய்ச்ச வேண்டும். வேகவைத்த பருப்பையும் மிளகு சீரகத்தை தூளாக்கி கஞ்சியினை இதோடு சேர்த்து சூடாக வாரமிருமுறை பருகினால் நுரையீரல் வலுப்பெறும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மழைக்கால நோய்கள் வரும்முன் நிலவேம்பு குடிநீரை வாரம் இருமுறை பயன்படுத்தினால் நல்ல தீர்வினை காணலாம். மேலும் மிளகு சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடலாம். தாய்மார்கள் சத்தான உணவு வகைகளை சேர்த்து வர குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். கற்பூரவல்லி, புதினா, இஞ்சி, சுக்கு, திப்பிலி போன்றவற்றை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். திப்பிலி, சுக்கு, மிளகு ஆகிய சேர்க்கப்பட்ட திரிகடுகு சுடுநீரில் சேர்த்து அருந்திவர மழை மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் அஜீரணக் கோளாறை தடுக்கும். இது இம்ப்காப்ஸ் விற்பனை நிலையத்தில் கிடைக்கும்.
மேலும், சூப்பு வகைகள் தயாரித்து அவ்வப்போது பருகிவர மழைக்கால நோய்களை தவிர்க்கலாம். சூப்பு குடிப்பது மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )