Healthy Heart: உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த பழக்கங்களையெல்லாம் கைவிடுங்கள்!
மாரடைப்பு ஏற்படாமால் தடுப்பதற்கு நாம் கைவிடவேண்டிய பழக்கங்கள் பற்றி மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு இதோ!
உலகம் முழுவதும் மனிதர்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இதய நோய்கள் இருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்று சொல்கிறது மருத்துவ உலகம். சில சமயங்களில், எந்த அறிகுறிகளும் இல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் உங்கள் இதயத்தை தவறாமல் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரோக்கியமான இதயம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானது. மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதயத்திற்கு உகந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது இதய நோய்களைத் தடுப்பதற்கான வழி. அதே வேளையில் சரிவிகித உணவு, உடற்பயிற்சி, ஆகியவைகளும் இதயத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எந்த வேளையிலும் உங்களுக்கு மாரடைப்பு வரலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது சரிதான்! எந்த அறிகுறிகளோ, குறைந்தபட்ச அறிகுறிகளோ அல்லது அடையாளம் காணப்படாத அறிகுறிகளோ கூட இல்லாமல் இருக்கலாம். திடீரென மாரடைப்பு ஏற்பட்டுவிடும். மேலும், பலருக்கு வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அதைப் பற்றித் தெரியாது. ஏனெனில் சிறிய அறிகுறிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். உங்களுக்கு காய்ச்சல் அல்லது மார்பில் தசை வலி இருப்பது போல் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. எதையும் வரும் காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல், வரும்முன் காப்பதே சிறந்தது. இந்த நவீன உலகில்,நம் வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் சீர்கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்க்க, நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆரோக்கியமான இதயத்திற்கு நாம் கைவிட வேண்டிய பழக்கங்களாக மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை கீழே காணலாம்.
ஆரோக்கியமற்ற துரித உணவு பழக்கம்:
நம் மோசமான உணவுத் தேர்வு நம் உடல் நலனிற்கு கேடு விளைவிக்கும். சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவைகள். இந்த இரண்டு வகையான கெட்ட கொழுப்புகள் துரித உணவுகளில் அதிகமாக இருக்கிறது. ஒரு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஒரு நபரின் தினசரி கொழுப்புகளின் பாதி தேவையை பூர்த்தி செய்யும். நீங்கள் டீ குடிக்கும்போது, பஜ்ஜி விரும்பி சாப்பிடுபவர்கள் என்றால், அதன் மூலம் அதிக அளவு உப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிக கலோரிகள்தான் கிடைக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகளில் அதிக கொழுப்புகள் நிறைந்திருக்கும். இதில் குறைந்தபட்சம் 13-19 சதவீதம் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன.
இதயம் பாதுகாப்புடன் இருக்க, எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நிறைய பழங்கள், நட்ஸ், குறைந்த உப்பு சேர்த்து வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம், ஆகியவற்றை ஸ்நாக்ஸ்-ஆக சாப்பிடலாம். பஜ்ஜி, மற்றும் எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் சாப்பிடுவதைக் குறைத்து கொள்ளவேண்டும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பண்டங்களுக்கு நீங்கள் சொல்லும் பெரிய ‘நோ’ உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
உணவில் அதிகம் உப்பு சேர்ப்பது:
உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்து கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது இதய நோய், மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்புக்கு போன்றவைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலேயே இயற்கையா உப்பு இருக்கிறது. அதனால், பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் 6 கிராமுக்கு குறைவாக உப்பை உண்ண வேண்டும் – அதாவது, ஒரு டீஸ்பூன். குழந்தைகள், வயதுக்கு ஏற்ப பெரியவர்களை விட குறைந்த அளவு உப்பை உண்ண வேண்டும். உணவுப் பொருட்கள் வாங்கும்போது லேபிள்களில் உள்ள ஊட்டச்சத்து தகவலைச் சரிபார்த்து, குறைந்த அளவு உப்பு உள்ள பொருட்களை வாங்க முயற்சிக்கவும்.
உடற்பயிற்சியின்மை:
உடல் செயல்பாடு இல்லாமை உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்சனைகள் உட்பட பெரும் ஆபத்துகள் ஏற்பட காரணமாகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை திறம்பட மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய எளிய, நேர்மறையான மாற்றம், நடைப்பயிற்சி செய்வதாகும். தினமும் 30-40 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
அதிகமாக மது அருந்துதல்:
அதிகபடியாக ஆல்கஹால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் எதிரி. இதனால் உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறுகள் ஏற்படும். உங்கள் இதயம் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்றால் அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை கைவிடுங்கள்.
புகைபிடித்தல்:
புகையிலை உள்ள நச்சுக்கள் இதயத்தின் தமணியை நேரடியாக பாதிக்கிறது. இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் நரம்பு குழாய்கள், காற்றறைகளில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதிக மன அழுத்தம்:
மன அழுத்தம் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யலாம். அதிக மன அழுத்தம் காரணமாக நாம் அதிகமாக சாப்பிடுவோம். ரிலாக்ஸ்காக புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படும். இதனால் இதய பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். மன அழுத்தத்தை நிர்வகிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரும் உதவியாக இருக்கும். இதய ஆரோக்கியம் என்பது மன ஆரோக்கியம் சேர்ந்ததுதான். பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் மன ஆரோக்கியத்தை உறுதி செய்ய, உங்களுக்கு பிடித்தவற்றைச் செய்யுங்கள். உங்கள் உணர்வுகளை சரியான சேனல் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தியானம், இசை கேட்பது ஆகியவற்றில் ஈடுபடுவது உங்களை ரிலாக்ஸ் ஆன மனநிலைக்கு உதவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )