Nuclear War: விண்வெளியில் அணு ஆயுத சோதனை.. பேரழிவை ஏற்படுத்தும் மோதல், அச்சுறுத்தும் உலக நாடுகள்...
Nuclear War: விண்வெளியில் அணு ஆயுதபோர் வெடித்தால், அது எத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Nuclear War: விண்வெளியில் அணு ஆயுதபோர் வெடித்தால், பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய உலக நாடுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ட்ரம்பின் பரபரப்பு பேச்சு
அணு ஆயுதங்கள் குறித்த உலகளாவிய கருத்து மோதல் மீண்டும் வெடித்துள்ளது. இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் தொடங்கி வைத்துள்ளார். ஆரம்பத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் என்று சூசகமாக கூறினார். தொடர்ந்து, பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிட்டு, அவர்கள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறினார். எனவே, மற்ற நாடுகள் தொடர்ந்து பூமிக்கு அடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையிலிருந்து பின்வாங்கக்கூடாது என தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
அணு ஆயுதம் தந்த பாடம்:
அமெரிக்க அதிபர் ட்ரம்பின்பேச்சை தொடர்ந்து, உலகின் கவனம் அணு ஆயுதம் ஏந்திய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணு ஆயுதத் தாக்குதல்களானது, அணு ஆயுதப் பயன்பாட்டின் விளைவு எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை ஏற்கனவே உலகிற்கு உணர்த்தியுள்ளது. எனவே, அணுசக்தி நாடுகள் இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். பூமியில் அணு ஆயுதப் போரினால் ஏற்பட்ட அழிவை உலகம் ஏற்கனவே கண்டிருக்கிறது, ஆனால் அணு ஆயுதப் போர் விண்வெளியிலும் வெடிக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில நாடுகள் இந்தத் திறனை பல தசாப்தங்களுக்கு முன்னரே எட்டியும் உள்ளன.
விண்வெளியில் அணு ஆயுத சோதனை:
உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே அணு ஆயுதங்களுக்கான போட்டி நிலவுவது என்பது ரகசியமல்ல. குறிப்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் பல தசாப்தங்களாக அணு ஆயுதப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது பற்றி இரு நாடுகளும் பேசினாலும், இரு நாடுகளும் ஆபத்தான அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதை உலகம் காண்கிறது. மேலும், 1958 மற்றும் 1962 க்கு இடையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் பூமியின் சுற்றுப்பாதையில் அதாவது விண்வெளியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தின. அமெரிக்கா ஒட்டுமொத்தமாக 5 அணு ஆயுதங்களையும், ஒருங்கிணைந்த ரஷ்யா 7 அணு ஆயுதங்களையும் விண்வெளியில் சோதித்துள்ளது.
குற்றச்சாட்டும்.. மறுப்பும்..
விண்வெளியில் அணு ஆயுத சோதனைகள் தீவிரமானதை அடுத்து, 1967 இல் விண்வெளி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ் இரு நாடுகளும் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த முடியாது. இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டில் ரஷ்யா விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கா கூறியது. இதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
விண்வெளியில் அணு ஆயுதப் போரை நடத்தக்கூடிய நாடுகள்
உலகில் ஒன்பது நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. அதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை அடங்கும். இருப்பினும், விண்வெளியில் போர் தொடுக்கும் திறன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் விண்வெளி எதிர்ப்பு செயற்கைக்கோள் ஏவுகணைகளை சோதித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில், மிஷன் சக்தியின் ஒரு பகுதியாக, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையுடன் கூடிய குறைந்த சுற்றுப்பாதை (Lower Orbit) செயற்கைக்கோளை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
அழிவு எவ்வளவு மோசமானதாக இருக்கும்?
பூமியில் அணு ஆயுதங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டது. இருப்பினும், விண்வெளியில் அவற்றைப் பயன்படுத்துவது இன்னும் மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடும். மிகப்பெரிய ஆபத்து மின்னணு மற்றும் கதிர்வீச்சு சேதத்தின் வடிவத்தில் இருக்கும். அத்தகைய வெடிப்பு ஏற்பட்டால், ஒரு பெரிய மின்காந்த துடிப்பு பூமியின் மேல் வளிமண்டலத்தை மூழ்கடித்து, நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை உடனடியாக செயலிழக்கச் செய்யும். இது ஜிபிஎஸ், மொபைல் நெட்வொர்க்குகள், இணையம் மற்றும் வங்கி அமைப்புகளை முற்றிலுமாக சீர்குலைக்கும். முழுமையான மின்தடை ஏற்படலாம். மேலும், கதிர்வீச்சு ஆபத்து நீண்டகாலத்திற்கு நிலவலாம்.





















