Fact Check: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசித்தது போலி ராமர் சிலையையா? - அயோத்தியில் நடந்தது என்ன?
Fact Check: அயோத்தி சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு, போலி ராமர் சிலை காண்பிக்கப்பட்டதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
Fact Check: அயோத்தி சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பழங்குடியினத்தவர் என்பதால், அவருக்கு போலி ராமர் சிலை காண்பிக்கப்பட்டதாக பரவும் காணொலியின் உண்மைத்தன்மை குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவும் காணொலி..!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த மே 1ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இந்நிலையில் சுரேஷ் குமார் என்பவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "தாழ்த்தப்பட்டவர்கள் என்று பிரித்து விட்டு அவர்களுக்கு எந்த பதவி தருகிறீர்கள் என்பது முக்கியமில்லை அவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்.. மூல விக்ரகத்தை மறைத்து துணி எழுப்பி இவருக்காக தனியாக வேறொரு ராம் லால்லா சிலை... இதெல்லாம் பண்ணீங்க சரி ராமருக்கு ஏன்டா பட்டையை போட்டு விட்டீங்க (கொண்டைய மறைங்கடா பாடிசோடாக்களா)" என பதிவிட்டுள்ளார். அதோடு, அயோத்தி ராமர் கோயிலில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழிபடும் காணொலி காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கென்று தனி ராமர் சிலை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சுவாமி தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
வீடியோவின் உண்மைத் தன்மை என்ன?
திரவுபதி முர்மு தொடர்பான உண்மை தன்மையை கண்டறிய அயோத்தி ராமர் கோயில் தொடர்பான காணொலிகளை ஆய்வு செய்தோம். அதன்படி, கடந்த 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று ராமரை வழிபட்டார். அக்காணொலியில் இருக்கும் ராமர் சிலையும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவில் ராமர் சிலையையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்தது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, குடியரசுத் தலைவர் இருக்கும் காணொலியில் இருந்த அதே தங்க நிற கதவு, ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியின் அருகில் இருப்பது தெரிய வந்தது. ராமர் சிலைக்கு பின்புறமாக இருக்கும் வெள்ளை நிற சுவரும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதை காண முடிந்தது.
Glimpses from President @rashtrapatibhvn Droupadi Murmu's visit to Sri Ram Janmabhoomi Mandir, Ayodhya, where she offers her devotion, offerings, aarti and prayers at feet of Sri Ram Lalla, on behalf of our nation, from inside the Garbh Griha of the Mandir. 👌🏻🙏🏻
— Ajay Dave (@knowlajay) May 1, 2024
"हमारे राम लला… pic.twitter.com/IiniwUpTiA
ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்தை ஒப்பிட்டுப் பார்த்தபோது, மூன்று அடுக்குகளுடன் அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த மூன்று அடுக்கும் கும்பாபிஷேக காணொலியிலும், குடியரசுத் தலைவரின் காணொலியிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. வைரலாகும் காணொலியில் ராமர் சிலைக்கு பின்னால் இருக்கும் சிவப்பு நிற திரை, சமீபத்தில் ராம நவமியின்போது ராமர் கோயிலில் நிகழ்ந்த 'சூரிய திலகம்' நிகழ்வு தொடர்பான காணொலியில் இருப்பது உறுதியானது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சுவாமி தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
இதையும் படியுங்கள்: Fact Check: அயோத்தி கோயிலில் குடியரசுத் தலைவருக்கு தனி ராமர் சிலை காண்பிக்கப்பட்டதா? உண்மை என்ன?
தீர்ப்பு:
தேடலின் முடிவில் பல்வேறு காணொலிகளை ஒப்பிட்டு பார்த்ததில், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு போலியான ராமர் சிலை காண்பிக்கப்பட்டதாக பரவும் காணொலி போலியானது என்பது உறுதியாகியுள்ளது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பு சற்றே திருத்தி எழுதப்பட்டுள்ளது.