(Source: Poll of Polls)
Fact Check: காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தாரா நடிகர் அல்லு அர்ஜுன்? வைரலாகும் வீடியோ உண்மையா?
காங்கிரஸ் கட்சிக்காக நடிகர் அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்தது போல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. அது உண்மையா? இல்லையா? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் நாடளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருவதால் அதையொட்டி பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பல போலி வீடியோக்கள், போலியான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தாரா நடிகர் அல்லு அர்ஜுன்?
அமெரிக்கா நியூயார்க் நகரில் அல்லு அர்ஜுன் பங்கேற்ற நிகழ்ச்சியின் பழைய வீடியோவை பகிர்ந்து, மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்வது போல் போலியான செய்தி பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் புலம்பெயர்ந்த இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், அவருக்கு கிராண்ட் மார்ஷல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதை, பொய் செய்திகளை அம்பலப்படுத்தும் BOOM இணையதளம் உறுதி செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் மக்களை நோக்கி அல்லு அர்ஜுன் கை அசைக்கும் காட்சிகளை, காங்கிரஸ் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்வது போல் இதற்கு முன்னரே போலி செய்தி பரப்பப்பட்டிருக்கிறது.
அந்த வைரல் வீடியோவில், "இது இந்தியாவின் மூவர்ணம். அது யாருக்காகவும் ஒருபோதும் தலைவணங்காது" என மக்களை நோக்கி அல்லு அர்ஜுன் பேசுகிறார். ஆனால், சமூக வலைதளத்தில் பகிர்ந்த பயனர் ஒருவர், அதை, "காங்கிரஸ் ஜிந்தாபாத். பாரத் ஜோடோ. காங்கிரஸ் கட்சிக்காக வாக்களியுங்கள்" என கேப்சனுடன் பகிர்ந்திருக்கிறார்.
உண்மை என்ன?
வாகனத்தின் மீது அல்லு அர்ஜுன் நின்று கொண்டு மக்களை நோக்கி கை அசைக்கும் மற்றொரு வீடியோ ஒன்றையும் BOOM செய்தி இணையதளம் கண்டறிந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக அல்லு அர்ஜுன் பிரச்சாரம் செய்கிறார் எனக் கூறி அந்த வீடியோ வைரலானது.
இந்த வீடியோவானது, கடந்த 2022ஆம் ஆண்டு, இந்திய தின அணிவகுப்பில் எடுக்கப்பட்டது என்பதையும் BOOM செய்தி இணையதளம் கண்டறிந்துள்ளது. 'கிராண்ட் மார்ஷல்' என்ற வாசகம் பதிந்த ஷாலை அல்லு அர்ஜுன் அணிந்திருக்கிறார்.
"Allu Arjun in India Day Parade" என்ற keywords போட்டு தேடினோம். கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22ஆம் தேதி பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்று நமக்கு யூடியூபில் கிடைத்தது. வைரல் வீடியோவில் காணப்பட்ட அதே உடையை அல்லு அர்ஜுன் அணிந்துள்ளார். அதே உரையை ஆற்றியிருப்பது தெரிய வந்தது.
இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை என்டிடிவி, டைம்ஸ் ஆப் இந்தியாவும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.