RRR box office collection: ஜப்பானில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ரஜினி.. ஓ..இதுதான் விஷயமா!
ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என விஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், உலக அளவில் 1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அண்மையில் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. அங்கு நாளுக்கு நாள் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகிக்கொண்டே வருகிறது.
இது குறித்து படக்குழு சார்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், “ கடந்த வெள்ளி, சனியில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்க வந்த ரசிகர்களின் தொகையானது 124.4 % சதவீதம் ஆகும். இது அதற்கு முந்தைய வெள்ளி, சனியில் வந்ததாக சொல்லப்பட்ட ரசிகர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். முந்தைய வாரத்தில் 9057 இருந்த ரசிகர்களின் வருகை, கடந்த வாரத்தில் 24, 889 ஆக அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
The number of people who watched #RRR on Fri-Sun is 124.4% compared to last Fri-Sun. 😍😍
— RRR Movie (@RRRMovie) November 21, 2022
Last weekend it was 9057 admissions and this weekend 24889 admissions.
The love got more than doubled and is keeping on multiplying 🤘🏻
ありがとう日本 ❤️
ஜப்பானில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகி 31 நாட்கள் ஆன நிலையில், படமானது 16.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதே வேகத்தில் படம் வரவேற்பை பெற்றால், பாகுபலி 2 வின் ஜப்பான் வசூலை முறியடித்து, ஜப்பானில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெரும். அப்படியானால் முதல் இடத்தில் எந்த படம் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். முதல் இடத்தில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து படம் இருக்கிறது. ஆம் 1995 ஆம் ஜப்பானில் வெளியான முத்து படம் 22. 50 கோடி வசூல் செய்துள்ளது. இதனை முறியடிக்கும் பட்சத்தில் மட்டுமே, ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதல் இடத்தை பிடிக்கும்.
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிடைத்த இந்த வரவேற்பு இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி இருந்தது. இது குறித்து முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜமெளலி அந்தக் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், “ என்னுடைய தந்தைதான் என்னுடைய எல்லா படங்களுக்கும் கதை ஆசிரியர். நாங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்தோம். அவர் அந்தக்கதையை உருவாக்கும் பணியில் இருக்கிறார்.” என்று பேசினார். இதனால் ஆர்.ஆர். ஆர் பாகம் 2 வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்து ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆர்.ஆர்.ஆர் 2 படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இது குறித்தான அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருந்தது. படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆருடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.