Mayilsamy: கருவறையில் மயில்சாமி புகைப்படம் வைத்து வழிபாடு நடத்திய கோயில் நிர்வாகம் - நெகிழ்ச்சியடைந்த பக்தர்கள்
மறைந்த நடிகர் மயில்சாமியின் புகைப்படம் கோயில் கருவறையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த நடிகர் மயில்சாமியின் புகைப்படம் கோயில் கருவறையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மயில்சாமி. மிமிக்ரி கலைஞராக இருந்து தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்த அவரின் வளர்ச்சி பலரும் முன்னுதாரமான ஒன்றாகவே இன்றளவும் உள்ளது. இப்படியான சூழலில் நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி அதிகாலையில் மாரடைப்பால் காலமானார்.
முந்தைய நாள் இரவு கேளம்பாக்கத்தில் அருகே மேலக் கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயிலில் நடந்த சிவராத்திரி விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். அங்கு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து பஜனையில் கலந்து கொண்டார். பின்னர் அதிகாலையில் வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த், பார்த்திபன், உதயநிதி, செந்தில், பிரபு உள்ளிட்ட கிட்டதட்ட தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் அனைவரும் மயில்சாமி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிப்ரவரி 20 ஆம் தேதி அவரது உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் வழிநெடுக அழுதபடியே பங்கேற்றது காண்போரை கண் கலங்க வைத்தது. இருந்தவரை மயில்சாமி செய்த உதவிகளால் அனைவரது மனதிலும் அவர் நிறைந்துள்ளார். இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் நினைவுகளாக பதிவிட்டு வருகின்றனர்.
அதேசமயம் நேர்காணல் ஒன்றில் நடிகர் போண்டாமணி, நடிகர் மயில்சாமி 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ஆனாலும் டாக்டர் சொன்னதை கேட்க மாட்டார். நான் இதுபற்றி கேட்டால், இருக்கும் வரை அனுபவித்து மக்களுக்கு நல்லது பண்ணிட்டு போக வேண்டியது தான் என கூறுவார் என அவரின் உதவும் பண்பை பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமியின் திருவுருவ படத்தை அவர் கடைசியாக பங்கேற்ற கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலின் கருவறையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு வருகை தந்த மயில்சாமி ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்துள்ளதாகவும், அவரின் ஆன்மா சாந்தியடையவே இப்படி செய்ததாகவும் கோயில் அர்ச்சகர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.