Raayan: அப்படியா! ராயனில் தனுஷின் தம்பியாக நடிக்க முதலில் யாரை கேட்டார்கள் தெரியுமா?
ராயன் படத்தில் நடிகர் தனுஷின் தம்பியாக முதன்முதலில் நடிக்க படக்குழு நடிகர் விஷ்ணுவிஷாலை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். நடிகர் தனுஷின் 50வது படமாக வெளியாகியுள்ள இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆக்ஷன் – சென்டிமென்ட் திரைப்படமாக வெளியாகியுள்ள இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
தனுஷ் தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பு:
இந்த படத்தில் நடிகர் தனுஷின் தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளனர். தங்கையாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். அண்ணன் – தம்பி – தங்கை சென்டிமென்ட் கதைக்களத்துடன் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த படத்தால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் தனுஷ்( காத்தவராயன்) தம்பியாக சந்தீப்கிஷன்(முத்துவேல் ராயன்) கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதன்முதலில் ராயன் படக்குழுவினர் நடிகர் விஷ்ணுவிஷாலையே அணுகியுள்ளனர். ஆனால், அவர் அப்போது லால்சலாம் மற்றும் அவரது பிற படங்களின் பணிகளில் தீவிரமாக இருந்ததால் அவரால் ராயனில் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு பதிலாக படக்குழு சந்தீப் கிஷனை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹவுஸ்புல் காட்சியாக ஓடும் ராயன்:
தனுஷின் தம்பியாக நடித்துள்ள சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லால்சலாம் படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அவரது நடிப்பில் தற்போது ஆர்யன் என்ற படம் உருவாகி வருகிறது. அவரது நடிப்பில் உருவான மோகன்தாஸ் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. விரைவில் விஷ்ணுவிஷால் ராட்சசன் படம் போல மிகப்பெரிய வெற்றியைத் தருவார் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராயன் படத்தில் நடிகர் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் மட்டுமின்றி எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா முரளி, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

