Padai Thalaivan: வெளியானது ‘படை தலைவன்’ First Look வீடியோ! பிறந்த நாளில் மகனுக்காக தந்தை விஜயகாந்த் செய்த செயல்!
தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படை தலைவன் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
சண்முக பாண்டியனின் மூன்றாவது படம்
சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் படைவீரன். வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய யு. அன்பு இப்படத்தை இயக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
பார்த்திபன் தேசிங்கு வசனம் மற்றும் திரைக்கதை அமைத்துள்ள நிலையில், கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், யாமினி சந்தர், ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சண்முகபாண்டியனின் தந்தையும் நடிகர், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு படைத் தலைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜயகாந்த் தன் பிறந்தநாளை இன்று காலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடிய நிலையில், அப்போது படை தலைவன் ட்ரெய்லரை வெளியிட்டார்.
படை தலைவன் க்ளிம்ஸ் வீடியோ
விஜயகாந்த் இன்று தன் 71ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இந்த வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. க்ளிம்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ள “ஒரு படையோட வலிமை அத வழி நடத்தற தலைவன் கொடுக்கற நம்பிக்கைல தான் இருக்கு” எனும் வசனம் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.
பரபர ஷூட்டிங்
முன்னதாக இப்படத்தின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில், இன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முன்னதாக தொடங்கிய நிலையில், ஒரிசா, தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தன் முதல் இரண்டு படங்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் சண்முக பாண்டியன் இப்படத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015ஆம் ஆண்டு ’சகாப்தம்’ எனும் படத்தின் மூலம் கோலிவுட்டில் சண்முகபாண்டியன் கால் பதித்த நிலையில், இப்படத்தில் விஜயகாந்தும் நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. அதனை அடுத்து வெளியான மதுரை வீரன் படமும் தோல்வியைத் தழுவியது.
புது லுக்
இதனிடையே சினிமாவில் இருந்து குட்டி ப்ரேக் எடுத்து அரசியல் பாதையில் தேமுதிகவில் சண்முக பாண்டியன் பயணிக்கத் தொடங்கினார். மேலும் தன் லுக்கை மாற்றி, உடலை மெருகேற்றி தன்னை சினிமாவில் தகவமைத்துக் கொள்ள முழுவீச்சில் தயாராகி வந்தார். அந்த வகையில் தற்போது படை தலைவன் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இயக்குநர் சசிகுமார் 'குற்றப் பரம்பரை’ நாவலைத் தழுவி எடுக்க உள்ள வெப் சீரிஸில் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.