Vijayakanth: ”என்னுடன் நடிக்க மாட்டேன்னு சொன்ன ஹீரோயின்கள்” - மனம் திறந்து பேசிய விஜயகாந்த்!
Vijayakanth: ”என்னுடன் நடிக்க மாட்டேன் என சொல்ல கதாநாயகிகள் எத்தனையோ பேர், என்னை வைத்து படம் எடுக்க மாட்டேன் என சொன்ன தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எத்தனையோ பேர் உண்டு” என பேசிய விஜயகாந்த் வீடியோ வைரல்
Vijayakanth: சினிமாவுக்கு வந்தபோது எத்தனையோ ஹீரோயின்கள் என்னுடன் நடிக்க மாட்டேன்னு சொன்னதாக விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இல்லாததால் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்தும், வாழ்வில் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ”நான் முதல்முறையாக மதுரையில் இருந்து சினிமாவுக்கு வந்த புதுசுல எக்மோர்ல தான் தங்கியிருந்து வாய்ப்பு கேட்டு போனேன். அப்பல்லாம் எனக்கு ரொம்ப திமிரு இருந்துச்சு. சினிமான்னா என்னன்னு தெரியாம இருந்ததால எல்லா இடத்துக்கும் போய் சான்ஸ் கேட்டேன். ஆனால் யாரும் கொடுக்கவே இல்லை. அதன்பிறகு சேனா பிலிம்ஸ் மர்சூக் என்பவர் ஒரு வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அப்படத்தில் நான் நடிச்சிட்டு இருக்கும்போது தன் என்னை வேண்டாம் என சொன்னார்கள். அப்போது தான் உண்மையான சினிமா நிலை என்பது எனக்கு புரிய ஆரம்பிச்சிது.
அதன்பிறகு நானே கஷ்டப்பட்டு கோடம்பாக்கத்தில் இருந்து எங்கெல்லாம் சென்னையில் சினிமா கம்பெனி இருக்கோ அங்கெல்லாம் ஏறி இறங்கி வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். அப்பதான் செலவு பண்ணனும், போட்டோக்கள் எடுக்கணும், நவரசத்தையும் முகத்துல கொண்டு வரணும், போட்டோஸ் கேட்பவர்களிடம் எல்லாம் கொடுக்க வேண்டும். இதற்கான நாம் செய்யும் முதலீடு நஷ்டமாக தான் செய்யும். இருந்தாலும் பரவாயில்லை என்று இருந்தேன்.
இதனிடையே நான் சென்னையை விட்டு வரமாட்டேங்கிறேன் என்பதால் வீட்டில் அப்பா கோபப்பட்டு கொண்டு எந்த உதவியும் பண்ணவில்லை. நண்பர்களின் உதவியால் தான் நான் கடைசி வரை சென்னையில் நடித்துக் கொண்டிருந்தேன். அதன்பிறகு என்னுடைய முதல் படமான இனிக்கும் இளமை வந்த பிறகு தான் என் அப்பா அதன்பிறகே செலவு பண்ண பணம் கொடுத்தார்.
இங்கே என்னுடன் நடிக்க மாட்டேன் என சொல்ல கதாநாயகிகள் எத்தனையோ பேர், என்னை வைத்து படம் எடுக்க மாட்டேன் என சொன்ன தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எத்தனையோ பேர் உண்டு. எல்லாத்தையும் மீறி இன்னைக்கு சினிமாவுக்குள் வந்து 151 படம் நடிச்சிருக்கேன் என்பது சந்தோஷம் தான். ஆனால் இந்த சினிமாவில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், யாரும் விரோதி என நினைக்கக்கூடாது. எல்லாரும் நண்பர்கள் தான். மார்க்கெட் என்றால் நம்மளை வச்சு படம் எடுப்பாங்க, இல்லைன்னா எடுக்க மாட்டாங்க என்பது தான் உண்மை.
நான் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது இன்னைக்கு இருக்கிறவர்கள் எல்லாம் சினிமா ஈஸியாக உள்ளது. நான் நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்ததால் கிடைத்த வெற்றி அது. ஏனென்றால் உழைப்புக்கு என்றைக்கும் பயப்பட மாட்டேன். காசு, பணம் கொடுப்பார்களோ இல்லையோ நான் உழைப்பேன். அதனால் தான் என் படங்களில் மரியாதை என்ற வார்த்தை சேர்ந்ததோ தெரியவில்லை. மேலும் பல நாட்கள் அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்க கடனை கூட நான் தலைவராக இருந்து அடைத்தேன். இன்றைக்கும் பெருமையாக சொல்வேன், எத்தனையோ திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா என்னுடைய கம்பெனியில் நெடுநாளாக இருந்த நிலையில் பின்னால் அவரோட தயாரிப்புல நான் படம் பண்ணினேன் இதையெல்லாம் பண்றப்ப ஒரு மரியாதை கிடைச்சிது” என பேசியுள்ளார்.