Vijayakanth Death LIVE: ஸ்தம்பிக்கும் கோயம்பேடு! தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்! லைவ் அப்டேட்!
நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மீண்டும் மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு காலமானதாக தெரிவிக்கப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயம்பேட்டில் குவிந்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நிலைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவ தொடங்கியது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தைப் போக தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மீண்டும் மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு காலமானதாக தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவு தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த திரண்டு வந்துள்ளனர். விஜயகாந்த் உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை இறுதிச்சடங்கு நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இப்படியான நிலையில் தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே காணலாம்.