Vijayakanth: ‛மீண்டும் வாருங்கள்...அன்பு தம்பி அழைக்கிறேன்’ விஜயகாந்துக்கு சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து!
வாழ்க்கையில எந்தவொரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர். அந்த போராட்ட குணம் உங்களிடத்தில் உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நல்ல பெயரை மட்டுமே சம்பாதித்தவர்கள் தனித்தனியே இருக்கிறார்கள். ஆனால், இரண்டிலும் நல்ல பெயரைமட்டும் சம்பாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். ஆனால் 1980 ஆம் ஆண்டு வெளியான தூரத்து இடி முழக்கம் படம் தான் அவரை அனைவரிடத்திலும் பரீட்சையமாக்கியது.
சுமார் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் விஜயகாந்த், சினிமா என்னும் கலையை வசூலுக்காக மட்டும் என்றல்லாமல் எல்லா தரப்பு மக்களும் பயனடையவேண்டும் என்று நினைத்தவர் . தனக்கு போட்டியாக கருதப்பட்ட சக நடிகர்களையும் அனுசரித்து அரவணைத்து சென்றதால் இன்றும் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக விஜயகாந்த் உள்ளார். 1984 ஆம் ஆண்டில் மட்டும் விஜயகாந்த் 18 படங்களில் நடித்து சினிமாத் துறையில் சாதனைப் படைத்தார்.
View this post on Instagram
1999 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை கலை நிகழ்ச்சிகள் மூலம் அடைத்ததோடு மட்டுமல்லாமல், நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தினார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொண்ட பற்றால் தனது 100வது படத்துக்கு கேப்டன் பிரபாகரன் என்றும், தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்றும் பெயர் சூட்டினார்.
இதற்கிடையில் தனக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜயகாந்த் தான் என்றும், விஜயகாந்துக்கு வரும் கதையில் நடிக்க சரியானவர் நான் தான் என்று நினைத்தால் அந்த இயக்குநரை தன்னிடம் அனுப்புவார் என சரத்குமார் பல இடங்களில் நினைவு கூர்ந்துள்ளார். அந்த அளவுக்கு இருவருக்குமான நட்பும், அன்பும் நிறைந்திருந்தது. விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்த சரத்குமார் பின்னாளில் முன்னணி நடிகராக உயர்ந்தார். அந்த நன்றியை என்றைக்கும் மறக்காதவர் என்பதை நிரூபிக்கும் வகையில், சரத்குமார் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வாழ்க்கையில எந்தவொரு பின்னடைவு இருந்தாலும் அதிலிருந்து போராடி வெற்றி பெற்றவர். அந்த போராட்ட குணம் உங்களிடத்தில் உள்ளது. மீண்டும் உங்கள் ரசிகர்களுக்காகவும், எங்களைப் போன்ற சகோதரர்களுக்காகவும் புத்துணர்ச்சி பெற்று இந்த பிறந்தநாள் முதல் சிறப்பாக எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என இந்த அன்பு தம்பி வேண்டிக் கொள்கின்றேன். மீண்டும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்தை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.