Vijay Sethupathi: “சாமியை காப்பாத்துறோம்ன்னு சொல்ற கூட்டத்தோடு பழகாதீங்க” - விஜய் சேதுபதி பேச்சு!
யாராவது எதாவது பேசினால், ‘என்னோட மதத்துல என்ன சொல்கிறது’ என்பதை பதிலாக சொல்லாமல், மனிதத்தையும், மனித நேயத்தையும் சொல்லி கொடுங்க என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
கடவுளுக்கு மனிதனுக்கும் இடையே மதம் அவசியம் இல்லாதது என நடிகர் விஜய் சேதுபது பேசிய பழைய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் ரஜினி, விஜய், ஷாருக்கான் என பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என பிற துறைகளிலும் தனது முத்திரையை விஜய் சேதுபதி பதித்துள்ளார்.
இப்படியான நிலையில் விஜய் 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இந்த படத்தில் பவானி என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#VijaySethupathi...💙💙💙💙 pic.twitter.com/0JXOhMy1lh
— Petchi Avudaiappan (@karthik0728) March 19, 2024
அதில், “இன்னொரு வைரஸ் இருக்கு. அது என்னன்னா சாமிக்காக சண்டை போட்டுகிறாங்க. ஏன்னு எனக்கு தெரியல. நாம எல்லாரும் ஒன்னு புரிஞ்சிக்கணும். சாமி பல கோடி வருஷமா இங்க இருக்குது. ஆனால் சாமி இன்னும் சாமியை காப்பாத்துற மகா மனுஷனை படைக்கல. சாமி தன்னை காப்பாத்திக்கும். சாமியை காப்பாத்துறன்னு சொல்ற எந்த கூட்டத்தோடும் பழகாதீங்க. அது ரொம்ப முக்கியம்.சாமியை ஒரு சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது.
அவர்கள் சொல்வது எல்லாம் பொய். இங்கே யாராவது எதாவது பேசினால், ‘என்னோட மதத்துல என்ன சொல்கிறது’ என்பதை பதிலாக சொல்லாமல், மனிதத்தையும், மனித நேயத்தையும் சொல்லி கொடுங்க. மனிதனை மதிக்க வேண்டும் என சொல்லுங்க. கடவுள் மேல இருக்காரு. மனிதன் தான் பூமியில் இருக்கிறான். மனிதனை மனிதனால் மட்டும் தான் காப்பாற்ற முடியும். இது மனிதர்கள் சகோதரத்துவத்துடன் சந்தோசமாக அன்பை பரிமாறிக்கொண்டு வாழும் இடம் இது. மதத்தை சொல்லி கடவுளையே பிரிக்கிறாங்க. கடவுளுக்கு மனிதனுக்கும் இடையே மதம் அவசியம் இல்லாதது” என விஜய் சேதுபதி பேச அதனை நடிகர் விஜய் ரசித்து கேட்டுக் கொண்டிருப்பார்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ மீண்டும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Vijay Sethupathi: சாதி, மதத்தை வைத்து ஓட்டு கேட்டால் போடாதீங்க.. நடிகர் விஜய் சேதுபதி அதிரடி!