Vijay Meeting: சிக்னலில் நிற்காத விஜய்யின் கார்.. ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. மக்கள் இயக்கம் மீட்டிங்கின் முக்கிய நிகழ்வுகள்..!
பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனையின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காணலாம்.
பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நடத்திய ஆலோசனையின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காணலாம்.
விஜய்யின் அரசியல் எண்ட்ரீ
1992 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் விஜய், இன்றைக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் சொல்லப்படும் அளவுக்கு முன்னணி நடிகராக உள்ளார். அவர் நடிப்பில் தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. அடுத்ததாக ‘தளபதி 68’ படத்தின் விரைவில் தொடங்க உள்ளது. இதுஒருபுறம் விறுவிறுப்பாக நடக்க, மறுப்பக்கம் விஜய்யின் அரசியல் வருகை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு காலக்கட்டத்திலேயே தனது ரசிகர் மன்றத்தை, ‘மக்கள் இயக்கம்’ ஆக மாற்றி தனிக்கொடியையும் அறிமுகம் செய்தார். அப்போதே விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்டதாக விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அதன்பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் காரணமாக பெரிய அளவில் அரசியலில் தலைக்காட்டாமல் இருந்தார்.
மீண்டும் அரசியல் ஆசை
ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தினரை சுயேட்சையாக நிறுத்தி மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டார் விஜய். அந்த தேர்தலில் ஓரளவு நல்ல வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றது அரசியல் கட்சியினரைக் கூட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து மக்கள் இயக்கத்தினர் வேறு அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடாது, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, பல்வேறு நற்பணிகள் செய்வது என தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருக்கும் நடவடிக்கைகள் மக்கள் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி விஜய் பாராட்டினார். இந்நிகழ்ச்சியும், விஜய்யின் பேச்சும் அரசியல் வருகையாகவே பார்க்கப்பட்டது. தொடர்ந்து இன்று பனையூரில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியதுடன் அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் அரசியல் வருகை குறித்து பேசியதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நிகழ்வுகள்
இந்நிகழ்ச்சிக்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய்யின் காரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். அப்போது வழியில் ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில், விஜய்யின் கார் நிற்காமல் சென்றதாக இணையத்தில் சிலர் விமர்சித்து வருகின்றனர். இதேபோல் விஜய்யை பார்த்த ஆச்சரியத்தில் ரசிகர் ஒருவர் வெடவெடத்து போனார். மாற்றுத்திறனாளி ஒருவர் அவர் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார் என ஏகப்பட்ட நிகழ்வுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது. மேலும் வந்திருந்தவர்களுக்கு தடபுடலாக சைவ சாப்பாடு விருந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.