Vijay Birthday: இந்தக் காரணத்தால் டாக்டராக்க நினச்சேன், பிடிவாதத்தால் நடிகனான விஜய்.. எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்த தகவல்!
Thalapathy Vijay Birthday: 'நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என்னோட முடிவை நானே மாத்திக்கமாட்டேன்' என்ற குணாதிசயம் விஜய்க்கு அப்போவே வந்தது தான்" - எஸ்.ஏ. சந்திரசேகர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகன் விஜய் வரும் ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தன்னுடைய தனிக் கட்சியைத் தொடங்கியுள்ளார். மேலும் தற்போது அவர் நடித்து வரும் 'தி கோட்' மற்றும் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படத்துடன் நடிப்பில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் இறங்கி மக்கள் பணிகளை செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் இந்த ஆண்டு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் விஜய் பிறந்தநாளுக்கு அவரின் தந்தை எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விஜய் பற்றிய சில கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
“நடிகர் விஜய் தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார். தங்கை திவ்யாவும் அதே அளவுக்கு அண்ணன் மீது பாசமாக இருந்தார். மூன்றரை வயதில் அந்த குழந்தை லுக்கிமியா நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழந்தது. அதனால் விஜய் டாக்டராகி லுக்கிமியா நோய் ஸ்பெஷலிஸ்ட்டாகி இலவசமா அந்த நோய்க்கு ட்ரீட்மெண்ட் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். இனி எந்த ஒரு குழந்தையின் பெற்றோரும் இந்த நோய் காரணமாக குழந்தையை பறிகொடுக்க கூடாது என எண்ணினேன்.
விஜய்யை டேய் விஜய், டேய் அண்ணா என்று தான் அதிகாரமாகக் கூப்பிடுவாள். மிகவும் சுட்டியான போல்டான அந்தக் குழந்தையை பறிகொடுத்த பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்தேன். 1991ம் ஆண்டு விஜய் என்னிடம் வந்து நான் நடிக்க போகிறேன் என சொன்ன போது நாங்கள் அதை நம்பவில்லை. அவன் ரொம்பவே சைலண்டாகவே இருந்து நங்கள் பார்த்துவிட்டதால் அவன் இந்த பீல்டுக்கு வர மாட்டான் என நினைத்தோம். என்னுடைய கனவை பற்றி நான் விஜய்யிடம் சொன்னேன். ஆனால் விஜய்க்கு நடிப்பில் தான் விருப்பம் இருந்தது. ஒரு தகப்பனாக மகனுடைய ஆசையை நிறைவேற்றினேன். பிள்ளைகளின் கனவை தகப்பனானவன் நிறைவேற்ற வேண்டும்.
'வெற்றி' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இன்று வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியுள்ளார். 'நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என்னோட முடிவை நானே மாத்திக்கமாட்டேன்' என்ற குணாதிசயம் அப்போதே வந்தது தான். நான் நடித்து தான் தீருவேன் என ஒரு ஸ்ட்ராங்கான முடிவை எடுத்தார் அதே போல இப்பவும் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளார். அது நல்ல முடிவாக இருக்கும் நிச்சயம் அது வெற்றியும் பெரும்” எனப் பேசியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.