'பிச்சைக்காரன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி! காத்திருக்கும் சர்பிரைஸ்!
நடிகரும் - இயக்குனருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே இயக்கி, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் சசி. இவர் 1998-ஆம் ஆண்டு நடிகர் லிவிங்ஸ்டனை ஹீரோவாக வைத்து சொல்லாமலே படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கில் சொல்லாமலே திரைப்படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்டார்.
பின்னர் மூன்று வருடம் இடைவெளி எடுத்து கொண்ட சசி, நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாக அறிமுகமான 'ரோஜா கூட்டம்' படத்தை இயக்கினார். இப்படம் ஸ்ரீகாந்தை முதல் படத்திலேயே வெற்றி பட நாயகனாக மாற்றியது. இதை தொடர்ந்து ஜீவாவை ஹீரோவாக வைத்து டிஷ்யூம், ஸ்ரீ காந்த் - பார்வதி நடித்த பூ, பாரத்தை ஹீரோவாக வைத்து ஐந்து ஐந்து ஐந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து பிச்சைக்காரன் போன்ற படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் கடைசியாக 2019-ஆம் ஆண்டு 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் வெளியானது. மாமன் - மச்சான் இடையே இருக்கும் உறவை இந்த படம் வெளிக்காட்டி இருந்தது.

இந்த படத்திற்கு பின்னர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படத்தை சசி இயக்க இருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் இந்த படத்தை இயக்க முடியாமல் போனது. தற்போது சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் சசி இயக்கம் படத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தை தயாரித்த அபிஷேக் ஃபிலிம்ஸ் இரமேஷ் P. பிள்ளை தயாரிக்க உள்ளார்.
மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து, இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணையும் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இரண்டு கதாநாயகர்கள் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் மருமகன், அதனை தங்கை மகன் அஜய் திஷான் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார்.

ஏற்கனவே தனுஷ் தான் இயக்கிய படத்தில், மருமகனை ஹீரோவாக களமிறங்கிய நிலையில்... தற்போது விஜய் ஆண்டனி தான் நடிக்க உள்ள படத்திலேயே மருமகனை ஹீரோவாக களமிறக்க உள்ளார். இவர்களை தவிர 'லப்பர் பந்து' மற்றும் 'மாமன்' படங்களில் நடித்த நடிகை சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், சசி இயக்கத்தில் தனது தங்கை மகன் அஜய் திஷான் அறிமுகமாவது பற்றி விஜய் ஆண்டனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு பாலாஜி ஶ்ரீராம் இசையமைக்கிறார், தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிபி பங்கஜாக்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பாக்க கூடிய படமாக மாறியுள்ளது.





















