Vignesh Shivan on AK 62: அஜித் கூட பிரச்சனையில்ல.. ஆனா.. ஏகே 62 பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்!
”அஜித் சார் படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை ஒரு அஜித் ரசிகனாக நான் பார்ப்பேன்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளதாகத் தகவல்
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், ஏகே 62 படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
விக்னேஷ் சிவனும் ஏகே 62வும்
’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62வை படத்தை இயக்குவதாக சென்ற ஆண்டே தகவல்கள் பரவிய நிலையில், லைகா நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியதுடன், வணிகரீதியாகவும் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏகே 62 குறித்த பேச்சுகள் எழத் தொடங்கின.
அதுமுதல் தொடங்கியதுதான் இந்த சர்ச்சைகளும் திருப்பங்களும். ஏகே 62 பட உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தொடர்ந்து விக்னேஷ் படத்திலிருந்து விலகினார் என்றும், கதையில் லைகா நிறுவனத்துக்கு திருப்தியில்லை என்றும் தகவல்கள் இணையத்தில் உலாவரத் தொடங்கின.
எண்ட்ரி கொடுத்த மகிழ் திருமேனி
விக்னேஷ் சிவன் தொடர்ந்து சில நாள்களில் இதனை உறுதி செய்யும் விதமாக தன் ட்விட்டர் பயோ மற்றும் கவரிலிருந்து ஏகே 62 மற்றும் அஜித் ஃபோட்டோவை நீக்க, அஜித்தும் சரி லைகா நிறுவனமும் சரி, விக்னேஷ் சிவனின் கதையை விரும்பவில்லை எனவும் தகவல்கள் உலா வரத் தொடங்கின.
மேலும், விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பட பூஜை ஏற்கெனவே நடந்தேறிவிட்டது என்றும் ஏகே 62 அப்டேட்கள் வரிசையாக வந்தன. தொடர்ந்து விக்னேஷ் சிவன் - அஜித்துக்கு இடையே கருத்து முரண் ஏற்பட்டதாகத் தகவல்கள் பரவத் தொடங்கிய நிலையில், ஏகே 62 பட வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து விக்னேஷ் சிவன் தற்போது மனம் திறந்துள்ளார்.
மனம் திறந்த விக்னேஷ் சிவன்
தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன் இது குறித்துப் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, “ஏகே 62 திரைப்படத்தின் வாய்ப்பு பறிபோனது கொஞ்சம் ஏமாற்றம்தான். அஜித் சார் பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை. படத்தின் இரண்டாம் பாதியில் தயாரிப்பாளருக்கு திருப்தியில்லை.
அஜித் சார் படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை ஒரு அஜித் ரசிகனான நான் பார்ப்பேன்” என விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீகாமன், தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி மகிழ் திருமேனி தற்போது அஜித்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏகே 62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.