Munthiri Kaadu Review: சாதியை ஒழிக்க காதல்தான் ஒரே வழியா? என்ன சொல்ல வருகிறது முந்திரிக்காடு திரைப்படம்? விமர்சனம் இதோ
Munthiri Kaadu Movie Review:'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள முந்திரிக்காடு படத்தின் விமர்சனம்.
M.Kalanjiyam
Seeman,Subapriya Puzhal
பல புதுமுகங்களை வைத்து, இயக்குநர் மு. களஞ்சியம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம், முந்திரிக்காடு. ஆணவக்கொலைகள் பற்றியும், சாதி வெறி பற்றியும் பேசும் இப்படம் இறுதியில் சொல்ல வரும் கருத்துதான் என்ன? பார்க்கலாம் வாங்க.
கதையின் கரு:
"காதலுக்கு எதிரி சாதின்னா..அந்த சாதிக்கு எதிரி காதல்தான்டா.." என்ற பஞ்ச் வசனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான், முந்திரிக்காடு.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், சாதிதான் எல்லாம். அங்கு சாதி மாற்றி காதலிக்கும் ஜோடிகளை தேடித்தேடி வெட்டிக் கொலை செய்கிறது, அவ்வூரில் உள்ள சாதிய வெறிபிடித்த கும்பல். அந்த கிராமத்தில், IAS கனவுடன் வாழும் உயர் சாதியை சேர்ந்த 'தெய்வம்' என்ற பெண்ணிற்கும், போலீஸ் கனவுடன் வாழும் கீழ் சாதி இளைஞன் செல்வாவிற்கும் இல்லாத காதலை இருக்கு எனக்கூறி சம்பந்தப்பட்டவர்களை சாதி பெருமை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்,சாதியவாதிகள்.
இப்படி இவர்களே ஒரு பொய்யை கிளப்பி விட, தெய்வத்திற்கும் செல்லாவிற்கும் உண்மையிலேயே காதல் வந்து விடுகிறது. இதனால். அந்த சாதி கும்பல், கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அந்த காதல் ஜோடியை அழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில், நாயகியை ஊருக்கு நடுவில் வைத்து முடியை அறுத்து மானபங்கம் செய்கின்றனர். இவ்வளவையும் தாண்டி, தெய்வம், செல்லாதான் வேண்டும் என ஒற்றை காலில் நிற்க, அவளை கொல்ல வேண்டும் என அப்பெண்ணின் சாதியை சேர்ந்தவர்கள் முடிவெடுக்கின்றனர். நாயகி கொலை செய்யப்பட்டாரா? செல்லாவும் தெய்வமும் வாழ்க்கையில் இணைந்தார்களா? இந்த சாதிய வெறிக்கு காரணம்தான் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது திரைக்கதை.
ஆணவக் கொலைகள்:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாதியப் படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான், முந்திரிக்காடு. வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள், சாதியின் பெயரால் கொடூரமாக கொல்லப்படுவதையும் படித்த பல இளைஞர்களே இது போன்ற சாதி வெறி பிடித்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் யதார்த்தத்துடன் காட்டியிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.
இருப்பினும்,"சாதி.. சாதி.." என படம் முழுவதும் ஒரு ஊரே பேசுவது, நம்புவதற்கு ஏதுவாக இல்லை. காதல் காட்சிகளும் அதற்காக காதல் ஜோடி போராடும் காட்சிகளும், சுத்தமாக மனதில் நிற்கவில்லை. அதற்கு, புதுமுகங்களின் நடிப்பும் முக்கிய காரணம்.
நடிகர்களின் பங்களிப்பு:
படத்தில், வேகத் தடைகள் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. வேகமாக சென்றால்தானே தடை ஏற்படுவதற்கு! பாடல்கள் அனைத்தும் சுமாருக்கு கீழ் ரகம்.
புது முகமாக களமிறங்கி இருந்தாலும், படம் முழுவதும் ஒற்றை கையால் தூக்கி சுமக்கிறார், சுபப்பிரியா மலர். க்ளைமேக்ஸ் எமோஷனல் காட்சியில் 10/10 மார்க் வாங்குகிறார். நாயகனாக வரும், புகழிற்கு இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் வேண்டும். நாயகியின் அப்பாவாக ஜெயராவ் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.
சீமான் அட்வைஸ்:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகர் மற்றும் இயக்குனருமான சீமான், 'சாட்டை ' பட சமுத்திரகனி போல சாதி வெறிபிடித்த இளைஞர்களுக்கு படம் முழுவதும் அட்வைஸ் கொடுத்துக் கொண்டேயிருக்கிரார். படத்தில், போலீஸ் அதிகாரியாக வரும் இவர், கட்சி கூட்டங்களின்போது, மேடையில் பேசுவதுபோல பல காட்சிகளில் தமிழர் பெருமை-தமிழரின் பண்பு என அடுக்கு மொழியில் வசனம் பேசி ஆங்காங்கே அப்ளாஸ் அள்ளுகிறார். இவருக்காகவே படத்தை பார்க்க வந்தவர்கள் ஏராளம்.
ஹீரோ-காதல்.. வில்லன்-சாதி
படத்தின் ஹீரோ யாரென்று பார்த்தால், அது நடிகர்களோ முக்கிய கதாப்பாத்திரங்களோ கிடையாது. இதில், சாதி விட்டு சாதி மாறி காதலிக்கும் காதலர்களின் காதலை ஹீரோவாகவும் அவர்களை பிரிக்க இடையில் இருக்கும் சாதியை வில்லனாகவும் காண்பித்துள்ளனர். "காதல்தான் சாதியை ஒழிக்க இருக்கும் ஒரே ஆயுதம்.." என இவர்கள் கூற வரும் கருத்தினை ஏற்றுக்கொள்ள சற்று நெருடலாகத்தான் உள்ளது. கிராமப் புறங்களில் சாதி வெறிபிடித்து இருப்போரை "நகரத்துக்கு வாங்க டா..அங்க இருந்துட்டு சாதியப் பத்தி நினைக்காம செத்துப்போங்க டா.." எனக்கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், நகரத்தில் சாதி இருப்பதை மறுப்பது போலாகிறது
சுருங்கச் சொல்லியிருந்தால்…
மொத்தத்தில், சொல்ல வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சுருங்கச் சொல்லியிருந்தால், கண்டிப்பாக முந்திரிக்காடு படம், பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும்.