ABP Nadu Exclusive: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய 'விடுதலை' திரைப்படம் - என்ன நடந்தது?
எழுத்தாளர் ச.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் என்ற புத்தகங்களில் இடம்பெற்ற காட்சிகளை, அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
![ABP Nadu Exclusive: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய 'விடுதலை' திரைப்படம் - என்ன நடந்தது? Viduthalai movie is embroiled in story plagiarism controversy TNN ABP Nadu Exclusive: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய 'விடுதலை' திரைப்படம் - என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/4a754a9a799452ad412577252afaace81680502441287113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த மார்ச்-31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே விடுதலை திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. எழுத்தாளர் ச.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவ சுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் என்ற புத்தகங்களில் இடம்பெற்ற வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பழங்குடியின மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகளை, அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக எழுத்தாளர் இரா.முருகவேள் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும்.
தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தா நடந்தது தர்மபுரி மாவட்டத்தில். 1980 ஆம் ஆண்டு. தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு நடந்தது 87 இல் என்று நினைக்கிறேன். ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது 1993 முதல் 1996 ம் ஆண்டுகளில் வீரப்பன் வேட்டையின் போது நடந்தது. இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால் மக்கள் யுத்தக் கட்சியும், தமிழ்நாடு விடுதலைப் படையும் தங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் காட்டிற்கு பின்வாங்கி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது. பின்பு சில பத்து பேராக விடுதலைப் படை சுருங்கிய பின்பே வீரப்பனின் சேர்ந்தார்கள். அதுவும் குறுகிய காலம் மட்டுமே. மூன்று வெவ்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலந்து குழப்பி திரித்து படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இயக்குனரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.
வனத்தில் வாழும் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதே படத்தில் இல்லை. படத்தில் வனத்துறையே இல்லை. பழங்குடிகள் வேறு, தலித்துகள் வேறு என்பது கூட தெரியவில்லை போல இருக்கின்றது. மக்களை சுரங்கத்துக்காக வெளியேற்றும் நடவடிக்கை ஏதாவது உள்ளதா என்றும் படத்தில் இல்லை. அதிரடிப் போலீஸ்காரர்கள் கோழி திருடர்கள் என்று வீரப்பன் தன் வீடியோக்களில் கிண்டல் செய்வார். போலீஸ்காரர்கள் ஏதோ பஞ்சம் பட்டினியில் இருந்தது போல காட்சி அமைத்திருப்பது மோசடி ஆகும். நக்சல் வேட்டை, வீரப்பன் வேட்டை ஆகியவை பல மாதங்கள் மாநிலத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் திட்டமிடல் செய்யப்பட்டு ஒருங்கிணைக்க பட்டு நடத்தப்பட்டவை. படம் இந்த நடவடிக்கைகளின் முழுப் பரிமாணத்தையும் தவற விட்டு அபத்தமாக எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஏபிபி நாடுவிடம் பேசிய எழுத்தாளர் சிவசுப்பிரமணியன், “விடுதலை படத்தில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் சிறப்பாக எடுத்துள்ளார். சத்தியமங்கலம் காடுகளில் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது மக்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவங்களில் இருந்து இக்காட்சிகள் எடுக்கப்பட்டது என வெற்றிமாறன் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் பலரின் கவனம் பாதிக்கப்பட்ட மக்களின் மீது திரும்பி, அவர்களுக்கு உதவிகள் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. அதை செய்திருக்கலாம். மற்றபடி எனது நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஏபிபி நாடுவிடம் பேசிய எழுத்தாளர் ச.பாலமுருகன், “யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என கதை விவாதம் என்ற பெயரில் பல நூல்களில் இருந்து காட்சிகள் திருடப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் விடுதலை படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை பார்த்ததும் எனது கருத்தை சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)