T J Gnanavel : வேட்டையன் இயக்குநரின் அடுத்த படம் இதுவா? படமாகும் பிரபல ஹோட்டல்காரரின் வாழ்க்கை வரலாறு
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்றை 'தோசா கிங்' என்கிற படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.
வேட்டையன்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் முன்னதாக கூட்டத்தில் ஒருத்தன் மற்றும் ஜெய் பீம் ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார். நீதிபதி சந்துருவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜெய் பீம் படம் இவருக்கும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி முடித்துள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் , ரக்ஷன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வேட்டையன் படத்தின் முதல் பாடலான 'மன்சிலாயோ' பாடல் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிய உடனே வைரலாகத் தொடங்கியுள்ளது.
ராஜகோபால் ஜீவஜோதி வழக்கை படமாக்கும் ஞானவேல்
வேட்டையன் படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் ஞானவேல் தனது அடுத்த படத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். ஹோட்டல் சரவண பவன் நிறுவனரான ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்றை 'தோசா கிங் ' என்கிற படமாக இயக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியில் 'பதாய் ஹோ படத்தை தயாரித்த 'ஜங்க்லீ பிக்ச்சர்ச்' இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ் திரைக்கதை எழுத இருக்கிறார். சமீபத்தில் கன்னடத்தில் வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த 'சப்தா சாகரதாச்சே எல்லோ' படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ் என்பது குறிப்பிடத் தக்கது.
தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ராஜகோபால் 1973 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து ஒரு சிறிய மளிகை கடையைத் தொடங்கினார். பின் 1981 ஆம் ஆண்டு சரவண பவன் என்கிற ஹோட்டலைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்குள் 22 நாடுகளில் 111 கடைகளை அவர் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் மற்றும் ஜீவ ஜோதி வழக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் ஜீவஜோதியின் கணவரான சாந்தகுமார் கொலை வழக்கில், ராஜகோபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சில நாட்களுக்கு பின்னர் உடல் நல குறைவால் ராஜகோபால் மறைந்தார்.