Ritika Singh: இதுக்கு மேல நான் என்ன பண்ணனும்? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ரித்திகா சிங்
பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் தமிழில் நடித்துள்ளேன் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? என்று நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் நடிகை என விளையாட்டு மற்றும் நடிப்பிலும் அசத்தி வருபவர் ரித்திகா சிங். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுக்கு மேல என்ன பண்ணனும்?
இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தனது வித்தியாசமான நடிப்பில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் நடித்துள்ளார். வேட்டையன் படத்திற்காக பேட்டி அளித்த அவர் கூறியதாவது, “ ஓ மை கடவுளே, ஆண்டவன் கட்டளை மாதிரி கதாபாத்திரங்கள் பண்ணிவிட்டேன். கலாபக்காரன் மாதிரி பாடல் பண்ணிவிட்டேன். வேற என்ன பண்ணனும்? என்னால் வித்தியாசமான பல கதாபாத்திரங்கள் செய்ய முடியும் என்று காட்டிவிட்டேன்.
நான் எப்போதும் சண்டை செய்வதை நிறுத்தமாட்டேன். பயிற்சி எடுப்பதையும் நிறுத்த மாட்டேன். ஏனென்றால் அதுதான் நான். என்னால் அதை மறக்க முடியாது. பெண்கள் எல்லாம் இப்படி பண்ண வேண்டாம் என்று மக்கள் சொல்லலாம். எதுக்கு வேண்டாம்?
தற்காப்பு என்றால் என்ன?
ஒரு இடத்திற்கு போகிறேன். ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது என்றால் யார் என்னை காப்பாற்றுவார்கள்? என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை என்றால் என்ன? உங்கள் குரல். ஒரு ஆபத்தில் சிக்கினால் உங்கள் குரலை பயன்படுத்துங்கள். பேச வேண்டும்.
ஏதாவது ஒன்று நிகழ்கிறது என்றால் யாரும் உதவ முன்வரவில்லை என்றால் குறைந்தபட்சம் அருகில் இருப்பதை எடுத்து தாக்கவாது தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் எப்படி தாக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டாம். எப்படி உங்களை பாதுகாத்துக் கொள்வது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கற்றுக்கொடுத்த விளையாட்டு
தற்காப்பு என்றால் பலரும் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும், பாக்சிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அல்ல. ஆபத்தான சூழலில் கராத்தே பண்ண வேண்டாம். அது ஒன்றும் விளையாட்டுத் தொடர் அல்ல. ஆனால், தப்பித்து ஓட வேண்டும். பள்ளியில் கடைசியாக நன்றாக ஓடியிருப்போம். சமயோஜிதம் மிக மிக முக்கியம்.
என்னை எந்த இடத்தில் விட்டாலும் நான் சமாளித்துவிடுவேன். எனக்கு பெரிய திட்டமிடல் ஏதுமில்லை. ஏனென்றால் நான் தடகள வீராங்கனை. இதைத்தான் நான் விளையாட்டில் இருந்து கற்றுக்கொண்டேன். இதைவிட மன வலிமை முக்கியம். வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை விளையாட்டு கற்றுக்கொடுக்கும். ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளை விரும்பி பார்ப்பேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதிச்சுற்று படத்தில் அவரது கதாபாத்திரம் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். ஓ மை கடவுளே படத்திலும் அவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மலையாளத்தில் வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் ஒரு பாடலுக்கு நடமானடியுள்ளார்.
திரைப்படங்களில் நடித்தாலும் அடிப்படையில் குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் அதற்கான பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.