Vetrimaran - Sudha Kongara : ஷூட்டிங் ஸ்பாட்டில் சுதா கொங்கரா - வெற்றிமாறன் சந்திப்பு... காரணம் இதுவா?
விடுதலை படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு தளத்தில் சுதா கொங்கரா மற்றும் வெற்றிமாறன் சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. 'துரோகி' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானாலும் இரண்டாவதாக அவர் இயக்கிய 'இறுதிச்சுற்று' திரைப்படம் பிறகு தான் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்தார்.
காயங்களுடன் சுதா கொங்கரா :
'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதை குவித்த சுதா கொங்கரா அதன் இந்தி ரீ மேக்கில் மிகவும் பிஸியாக இருந்தார். அக்ஷய் குமார் நடிக்கும் இப்படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஓய்வில் இருந்து வரும் சுதா கொங்கரா, இயக்குனர் வெற்றிமாறனை விடுதலை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளார். அங்கே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சுதா கொங்கரா. இது தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை அடுத்து எடுக்க உள்ளார். அதேபோல் சுதா கொங்கரா 2வது முறையாக சூர்யாவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விடுதலை ஷூட்டிங் :
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் இந்த மாதத்தின் இறுதியில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.