Vetri Duraisamy: நிறைவேறாமல் போன வெற்றி துரைசாமியின் சினிமா கனவு! அவர் இயக்கிய ஒரே படம் பற்றிய தகவல்!
Vetri Duraisamy: 'என்றாவது ஒரு நாள்' என்ற ஒரே படத்தை இயக்கியதோடு தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் இயக்குநர் வெற்றி துரைசாமி.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், தமிழ் சினிமாவின் இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.
சர்வதேச விருதுகளை வென்ற படம்
தமிழ் திரைப்பட இயக்குநரும் வைல்ட் லைஃப் போட்டோகிராபருமான வெற்றி துரைசாமி இயக்கிய 'என்றாவது ஒருநாள்' திரைப்படம் 2021ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியானது. குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த தம்பதி அன்புடன் வளர்க்கும் இரண்டு கால்நடைகளையும் சுற்றிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் நடிகர் விதார்த், ரம்யா நம்பீசன், குழந்தை நட்சத்திரமாக ராகவன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 42க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றது.
அடுத்ததாக ஒரு த்ரில்லர் ஜானரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க நினைத்த வெற்றி துரைசாமி, அதற்காக லொகேஷன் பார்ப்பதற்காக தனது நண்பர் கோபிநாத் மற்றும் டிரைவர் தன்ஜின் உடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்னர் சென்ற போது, அவரின் கார் கசாங் நலா என்ற பகுதியில் செல்லும்போது பாறை ஒன்றில் மோதி 200 அடி பள்ளத்தில் விழுந்து சட்லஜ் நதிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
வெற்றி துரைசாமியின் டிரைவர் தன்ஜின் இறந்துவிட அவரது நண்பர் கோபிநாத் ஆபத்தான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் நிலை இத்தனை நாட்களாக என்ன ஆனது என தெரியாமல் இருந்த நிலையில், இமாச்சல பிரதேசத்து காவல் துறையினர் ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வைத்து தீவிரமாக தேடி உடலை சடலமாக மீட்டு எடுத்தனர். அவரின் உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
இயக்குநர் வெற்றி துரைசாமியின் மரணத்திற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், அதிகாரிகள் எனப் பலரும் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தார். இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
'என்றாவது ஒரு நாள்' என்ற ஒரு தரமான திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி துரைசாமி, பல கனவுகளுடன் அடுத்ததாக எடுக்க நினைத்த படத்தை எடுக்க முடியாமல் இப்படி அகால மரணமடைந்தது அவரது குடும்பத்தினரையும், திரையுலகத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆசை மற்றும் கனவுகளுடன் லொகேஷன் பார்க்கச் சென்ற அவரின் பயணமே அவரது கடைசி பயணமாக முடிந்தது.