Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்!
வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
வெற்றி துரைசாமி மரணம்:
இவரது ஒரே மகனான வெற்றி, இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்படக் கலைஞராகவும் இருந்தார். அதேசமயம் வெற்றிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. இப்படியான நிலையில் இவர் தனது புதிய படம் தொடர்பான பணிக்காக இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தார்.
உடன் நண்பர் கோபிநாத் சென்றிருந்த நிலையில் கடந்த வாரம் உள்ளூர் ஓட்டுநர் டென்ஜின் என்பவரது காரில் இருவரும் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, கார் கட்டுப்பாட்டை இழந்து கின்னவுர் பகுதியில் ஓடும் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் டென்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று வெற்றி துரைசாமி உடல் கண்டெடுக்கப்பட்டது. சென்னை கொண்டு வரப்படும் வெற்றி துரைசாமியின் உடல், இறுதிச் சடங்குகளுக்கு பிறகு இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் அஜித்:
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைத்தளத்தில் #RIPVetriDuraisamy என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ள நிலையில், அதில் மனிதநேய அறக்கட்டளையில் படித்து இன்றைக்கு சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரும் வெற்றி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், சைதை துரைசாமிக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
Ajith sir paid his last respect at the funeral of his beloved friend Vetri Duraisamy 💔🙏🏻💐#RIPVetriDuraisamypic.twitter.com/3Ti4EQ8Swo
— AJITH MANIA (@AjithMania) February 13, 2024
இந்த நிலையில், வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார். வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தாம்பரம் அடுத்து படப்பையில் உள்ள சைதை துரைசாமியின் பண்ணை இல்லத்திற்குச் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.