Veerapandiya Kattabomman: மீண்டும் திரைக்கு வருகிறது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்! எங்கு? எப்போது?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் முதன் முதலாக 1959ஆம் ஆண்டு வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஆண்டுவீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் முதன் முதலாக 1959ஆம் ஆண்டு வெளியானது. இதில் பழம்பெரும் நடிகர்கள், ஜெமினி கணேசன், பத்மினி, வி கே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர்.
உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்!
பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஈஸ்ட் இந்தியா கம்பெனியை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வீரரின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இதில் நடிகர் சிவாஜி கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்துள்ளார் என்பதை விட, வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியானதற்கு 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இந்தியா சுதந்திரம் வாங்கியிருந்தது. இதனால் சுதந்திர தாகம் தீராமல் சுற்றிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு இந்த படம் பெருந்தீனியாக அமைந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் கதாப்பாத்திரம் எப்படி இன்று வரை மனதில் நிற்கின்றதோ, அதே போல படத்தில் வந்த பல கதாப்பாத்திரங்கள் மனதுடன் ஒன்றிவிட்டன. படத்தில் வெள்ளையம்மாளாக நடித்த பத்மினியும், அவருக்கு ஜோடியாக நடித்த ஜெமினி கணேசனும், சிவாஜி கணேசனுக்கு இணையாக பேசப்பட்டவர்கள். வீரத்திற்கு எப்படி கட்டபொம்மனை சான்றாக கூறுகிறோமோ, அதே போல துரோகத்திற்கு எட்டப்பனை தான் கூறுவோம். படத்தில் வந்த எட்டப்பன் கேரக்டரில் வி கே ராமசாமியைத் தவிர வேறு யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று கூறுவது மிகையாகாது.
மனதில் நிற்கும் வீரபாண்டிய கட்டபொம்மன்
பிரிட்டீஷ் ஆட்சியின் போது பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறும் கொள்ளைகளை தடுக்க போராடும் வீரர், கட்டபொம்மனைப் பற்றி கதை அமைக்கப்பட்டிருக்கும். இறுதியில் சூழ்ச்சி வலைகளால் பிரிட்டீஷ் கையில் பிடிபட்டு உயிர் நீத்த வீரரின் கதையாக நிறைவு பெறும் கதை, வீரபாண்டிய கட்டபொம்மன்.
படத்தில் சிவாஜி கணேசன் பேசிய “வரி, வட்டி, கிஸ்தி. யாரைக் கேட்கிறாய் வரி? எதற்கு கேட்கிறாய் கிஸ்தி?” என்ற பஞ்ச் வசனத்தை எங்கு கேட்டாலும் மெய் சிலிர்க்கும். இந்த வசனத்தால் ஈர்க்கப்பட்டுத்தான் சில நடிகர்கள் நடிக்கவே வந்ததாக கூறுவர். ஒரு காலத்தில் இந்த வசனத்தை ஆடிஷனில் பேசினால் தான் நடிப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு தமிழ் திரையுலகில் பெரும் தாக்த்தை ஏற்படுத்திய படம் இது. மேலும், சிவாஜி கணேசனின் அபார நடிப்பும் இப்படம் இன்றும் சிறந்த சினிமாவிற்கான எடுத்துக்காட்டாக கூறப்படுவதற்கான ஒரு காரணம். தனது அபார நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் படத்திற்கு உயிர் கூட்டியவர் நடிப்பு திலகம் சிவாஜி. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு இன்றளவும் சினிமா உலகில் அத்துனை ரசிகர்கள் உள்ளனர். காரணம், அந்த காலத்திலேயே பிரம்மாண்டமாய் போடப்பட்ட அரங்க அமைப்பும், துணிச்சலான வசனங்களும் தான்.
இறுதியில், எட்டப்பனின் துரோகத்தால் பிரிட்டீஷ் அதிகாரிகளால் தூக்கிலடப்படுவார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வரலாறு படைத்த திரைப்படம்
1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை காண, ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால், இப்படம் 25 வாரங்களை வெற்றிகரமாக கடந்து சில்வர் ஜூப்ளியை எட்டி வசூலிலும் சாதனை படைத்தது. அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் எம் ஜி இராமச்சந்திரனால் மறுபடியும் திரையரங்குகளில் வெளியிட்ப்பட்டது. 30 ஆண்டுகள் கழித்து வெளியிட்ப்பட்ட சுவடே தெரியாத அளவிற்கு 30 வாரங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, மீண்டும் சாதனை படைத்தது வீரபாண்டிய கட்டபொம்மன்.
மீண்டும் திரைய்க்கு வரும் வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தி. நகரில் உள்ள கிருஷ்ணவேனி திரையரங்கில் நாளை (ஆகஸ்ட் 10) மீண்டும் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை, மதியம் 12 மணிக்கு ஒரு காட்சி மட்டும் உள்ளதாகவும், அதற்கு கட்டணமாக 1 ரூபாய் மட்டுமே வசூலிக்க உள்ளதாகவும் கிருஷ்ணவேணி திரையரங்கின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.