Maamannan: மாமன்னன் படம் எடப்பாடி பழனிசாமி, தனபால் கதையா? - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்..!
மாமன்னன் படம் முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் கதை என சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படம் முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் கதை என சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. இந்த படம் தன்னுடைய கடைசிப்படம் என உதயநிதி தெரிவித்திருந்தார்.
இதனால் அவருக்கு சிறப்பான பிரியாவிடை அளிக்க ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். பல இடங்களிலும் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பட்டியலின மக்களின் அடையாளத்தையும், அரசியலையும், ஆதிக்க வர்க்கம் எப்படி தங்களுக்கான அரசியலில் சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை வெளிப்படையாக இப்படம் பேசியுள்ளது.
இந்த படம் பார்த்த பலரும் வசனங்கள், காட்சிகள் குறித்த தங்களுடைய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் மாமன்னன் படம் நடிகர் வடிவேலுவின் நடிப்பு ஆளுமைக்கு மற்றுமொரு சிறந்த சான்று என பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேசமயம் மாமன்னன் படம் பார்த்த பலரும் வடிவேலுவின் கேரக்டர் முந்தைய அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபாலை நியாபகப்படுத்துவதாக தெரிவித்திருந்தனர்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தனபால் அதிமுக சார்பில் 7 முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல், சேலம், திருப்பூர் , சங்ககிரி, ராசிபுரம் , அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார். 2012 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இது அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.
இப்படியான நிலையில் மாமன்னன் படத்திலும் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வடிவேலு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று சபாநாயகராக பதவியேற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பான ட்வீட் ஒன்றுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருந்தார். இணையவாசி ஒருவர், “தனபால்தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள் அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் பதிவு செய்து, எடப்பாடி அவர்களையும் பேட்டி எடுத்து 'நீங்க இப்படிதான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேட்க முன்வரவேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனை ரீ-ட்விட் செய்த உதயநிதி ‘சிரிப்பது’ போன்ற ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.