Udhayanidhi Stalin: ‘விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி.. ஆனால் ஒரு கண்டிஷன்’ - உதயநிதி ஸ்டாலின்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிகர் விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். பின்னாளில் நடிகராகவும் பல படங்களில் நடித்த உதயநிதி தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் என பலரும் நடித்திருக்கின்றனர்.
இதனிடையே மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த ஜூன் 17 ஆம் தேதி விஜய், தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இது விஜய் அரசியலுக்கு வருவதற்கான தொடக்கப் புள்ளி என்ற பேச்சு எழுந்தது.
அன்றைய தினம் உதயநிதியிடம், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என அவர் பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து உதயநிதி எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும், நேர்காணல்களில் பங்கேற்றாலும் விஜய் அரசியல் குறித்த கேள்வியே முன்வைக்கப்பட்டது. இதனிடையே தற்போது உதயநிதி அளித்துள்ள நேர்காணலில், ‘விஜய் நடத்திய நிகழ்ச்சி அரசியல் வருகைக்கான தொடக்கப்புள்ளியாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அதற்கு அவர் தானே பதில் சொல்ல வேண்டும். அவரை தவிர எல்லோரிடமும் கேள்வி கேட்கிறார்கள். இதுதொடர்பாக விஜய் தான் முடிவெடுத்து, பதில் சொல்ல வேண்டும்.
அவர் மாணவ, மாணவிகளை பாராட்டியது நல்ல விஷயம் தான். அதேசமயம் அவர் அரசியலுக்கு வரும்போது கொள்கைகள் என்னன்னு சொல்லட்டும். எங்க கட்சிக்குன்னு மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு எதிர்ப்பு என கொள்கைகள் இருக்கு. அந்த மாதிரி விஜய்யின் அரசியல் கொள்கைகள் ஒத்துப்போச்சு என்றால் இணைந்து பயணிக்கலாம்” என உதயநிதி தெரிவித்துள்ளார்.