Nenjukku Needhi | தாத்தாவின் கோட்பாடு.. பேரன் ஹீரோ.. என்ன சொல்ல வருகிறது 'நெஞ்சுக்கு நீதி'!!
இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'
2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப்பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, இப்படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் முதலில் தொடங்கப்பட்டன.
இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடந்து, இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அண்ணல் அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தில் முக்கியமானது‘சட்டப்பிரிவு 15’. இப்பிரிவானது, ‘சாதி, மதம், இனம், நிறம், பிறப்பிடம், பால் ஆகியவற்றைக் கொண்டு ஒருவர்மீது ஒருவர் பாகுபாடு காட்டக் கூடாது. குறிப்பாக மக்களுக்கான அரசு இத்தகைய வேறுபாடுகளின் அடிப்படையில் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது’ என்று கூறுகிறது. ஆனால் இந்த விதிகளை கொஞ்சமும் மதிக்காமல், அரசும் அதிகார வர்க்கமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது தான் ஆர்டிக்கிள் 15 திரைப்படம்.
வெளிநாட்டில் படித்து, டெல்லியில் பணிபுரிந்துவிட்டு, பின்னர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் பணிபுரிய வருவார் காவல்துறைத் துணை ஆய்வாளர் அயன் ரஞ்சன். தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான ஆதிக்கசாதியினரின் ஒடுக்குமுறை அயன்ரஞ்சனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் காணாமல்போகிறார்கள். அவர்களில் இரண்டு பேர் மரங்களில் தூக்குமாட்டித் தொங்கவிடப்பட்டனர். ‘இருவரும் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள். இது தெரியவந்ததால் தான் அவர்களது குடும்பத்தினரே சிறுமிகளை கொலை செய்தார்கள் என்று வழக்கை முடிக்க காவல்துறை முயற்சி செய்யும். மூன்றாவது சிறுமியைத் தேடவும் முயற்சி எடுக்காது. இந்த வழக்கை விசாரிக்க தொடங்கும்போதுதான் காவல்துறையின் உள்ளேயும் ஊடுருவியுள்ள சாதியக் கொடூர மனநிலை அயன் ரஞ்சனுக்கு தெரியவரும். கூடவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கிராமப்புரங்களில் நடத்தப்படும் வன்முறை, ஆதிக்கசாதி குணம், அதிகார மனநிலையும் இணைந்து அவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பல உண்மைகள் தெரியவருகின்றது. அந்த வழக்கை முடிக்க பல்வேறு தரப்புகள் முயற்சி செய்வதும், அந்த முயற்சிகளை முறியடித்து சமூக நீதிக்காக காவல்துறை துணை ஆய்வாளர் அயன் ரஞ்சம் நடத்து போராட்டமே ஆர்டிக்கிள் 15.
'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு பெயரிடப்படாமல் இருந்த நிலையில் இன்று இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் போனி கபூர். இதில் ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு நெஞ்சுக்கு நீதி என்று பெயரிடப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி என்பது நாயகன் உதயநிதியின் தாத்தாவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பல கட்டங்களாக எழுதிய நூல் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த நூல்தான் திமுகவினரின் மகாபாரதம். இந்த பெயரை தான் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். இப்படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்த அயன் ரஞ்சன் வேடத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஜாதி ஜாதி ஜாதி யாரு தந்த ஜாதி.. நீதி நீதி நீதி நீயும் நானும் நீதி.. ஜாதி ஜாதி ஜாதி சூறையாடும் ஜாதி.. நீதி நீதி நீதி தீர்வு தரும் நீதி.. என்ற பின்னணிக்குரலில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முடிவில் நெஞ்சுக்கு நீதி, பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று முடிகிறது அந்த மோஷன் போஸ்டர்.. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாசகமே கருணாநிதி தீவிரமாக பின்பற்றிய கோட்பாடாகும்.
இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ரூபன் செய்கிறார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓகே ஓகே போன்ற காமெடி ஜானரில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், மனிதன், நிமிர், பிசாசு போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆர்டிகிள் படத்தில் உதயநிதி நடித்திருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make way for the motion poster of #NenjukuNeedhi! #NenjukuNeedhiMotionPoster@ZeeStudios_ @BayViewProjOffl Presentation of @BoneyKapoor Production in association with #RomeoPictures @mynameisraahul
— Boney Kapoor (@BoneyKapoor) October 16, 2021
@Udhaystalin @Arunrajakamaraj @actortanya https://t.co/yrQsNMplyd