Celebrity Periyar Birthday Wish : விஜய் முதல் கமல்ஹாசன் வரை.. தந்தை பெரியாரை நினைவுகூர்ந்த பிரபலங்கள்
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் திரையுலக பிரபலங்கள் பெரியாரையும் அவரது கருத்துக்களையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்
பெரியார் 146ஆவது பிறந்த தினம்
வாழ்ந்த காலம் கடந்தும் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றை பெயர்தான் பெரியார். சமத்துவம், சமூகநீதி போன்ற மனிதகுலத்தின் மிக அத்தியாவசியமான கொள்கைகளுக்காக, குரல் கொடுத்து முக்கிய சீர்திருத்தங்களுக்கான காரணமாக திகழ்கிறார். தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற பெரியாரின் 146ஆவது பிறந்த நாளான இன்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் விஜய் , நடிகர் கமல்ஹாசன் , இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பெரியாரை நினைவு கூர்ந்துள்ளார்கள்.
பெரியார் திடலில் மாலை செலுத்திய தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் இப்படி கூறியுள்ளார் " சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்! "
கமல்ஹாசன்
'சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்." என உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பா ரஞ்சித்
திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் "வெகுஜன பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையில் இருக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் பேசி,அதனூடே மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர் பெரியார். இதுவே பெரியாரிடம் நாம் கற்க வேண்டிய பாடம். இயலாமைகளை மறைக்க அதையே "சமூக யதார்த்தம்" என்று தப்பித்துக் கொள்ளாமல் பெரியார் வாழ்ந்து போனதற்கான நியாயத்தை செய்வோம். வாழ்க பெரியார்" என பதிவிட்டுள்ளார்