Samantha - Trisha : இவங்களுக்கு பதிலா சமந்தாவா? கதீஜா கேரக்டர் பற்றி சீக்ரெட் சொன்ன விக்னேஷ் சிவன்
'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் சமந்தா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை வேறு ஒருவர் என்பதை மனம் திறந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
முக்கோண காதல் கதை என்பது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதான ஒரு கதையல்ல. பல படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைந்துள்ளன. அந்த வரிசையில் 2022ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.
விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் அனிருத். பகலில் கால் டாக்ஸி டிரைவராக நயன்தாராவையும், இரவில் பப்பில் பவுன்சராக சமந்தாவையும் மாறி மாறி காதலிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் ஸ்வாரஸ்யமாக நகர்த்தப்பட்ட இந்த கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக படத்திற்கு பக்க பலமாக அமைந்தன. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதிலும் வெளியிட்டது.
கல்யாணம் என்றாலே விஜய் சேதுபதி குடும்பத்திற்கு ஆகாது. ஆண்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற தோஷம் இருப்பதால் ஆண்கள் அனைவரும் சிங்கிளாகவே சோலா பாடி வருகிறார்கள். விஜய் சேதுபதியின் தந்தை கூட திருமணம் செய்து கொண்டதால்தான் இறந்து விடுகிறார் என்பதால் அவரை அனைவரும் ராசியில்லாதவன் என ஒதுக்கி விடுகிறார்கள். அந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதி ஒன்றல்ல இரண்டு தேவதைகள் மீது காதல் வயப்படுகிறார். இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறும் காட்சிகள் திரையரங்கை கரகோஷங்களால் அதிர வைத்தன. ‘ஐ லவ் யூ டூ’ ‘ஐ லவ் யூ டூ’ என விஜய் சேதுபதி செய்யும் அலப்பறைகள் அனைவரையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்து கொள்கிறார்? உண்மையான காரணம் என்ன? எப்படி இருவரையும் சமாளிக்கிறார் என்பதை மிகவும் விறுவிறுப்பாக நகர்த்தி இருந்தார் விக்னேஷ் சிவன்.
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா கண்மணியாகவும், சமந்தா கதீஜாவாகவும் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகைகள் இருவரும் ஒன்றாக நடித்ததால் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து விக்னேஷ் சிவன் நேர்காணல் ஒன்றில் பேசிய போது சமந்தா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது நடிகை திரிஷா. ஆனால் திரிஷா அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்காததால்தான் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு நான்கு ஆண்டுகள் இடைவேளைக்கு பின் நடிகை சமந்தாவிடம் இந்த படத்தின் கதையை கூறியபோது முதலில் யோசித்த அவர் பின்னர் சம்மதம் தெரிவித்தால்தான் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் சாத்தியமானது என்றார்